உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

9

"வடநாட்டில் அடிமை முறை இல்லாதது குறித்து மகிழ்ச்சி! னால், தென்னாட்டிலிருந்து அடிமையர் வடநாட்டிற்குள் ஓடிவந்தால் அனுமதிக்கக் கூடாது,வடநாட்டு அரசாங்கம். எந்த அடிமையாவது வடநாட்டிற்குள் திரிவதாகத் தெரிந்தால் அந்த அடிமையைப் பிடித்துக் கொடுக்க வேண்டியது வடநாட்டின் கடமை. பிடித்துத் தந்தவருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுவது தென்னாட்டின் கடமை" என்று ஒப்பந்தம் செய்துகொண்டது. வடநாட்டில் அடிமை முறை வழக்கில் இல்லாதிருந்தபோதிலும் அடிமையரால் வந்துகொண்டிருந்த வருமானத்திற்கு மட்டும் குறைவில்லை. தென்னாட்டினின்று தப்பி வந்த அடிமையாயினும் சரி, ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து புதிதாக வந்தவராயினும் சரி, அவர்களைப் பிடித்துத் தந்து பரிசு பெற வேண்டியதே வடவர் குறிக்கோளாகப் போய் விட்டது.

"நான் எவருக்கும் அடிமையாக இருந்ததில்லை" என்று எந்த நீக்ரோவேனும் சொல்வானேயானால் அதை விசாரித்து முடிவு கட்ட வேண்டிய உரிமையும் தென்னாட்டவர்க்கே இருந்தது. அந்தோ! திருடுபவனே தீர்ப்பளிப்பவனாகவும் இருந்தால் நீதி கிடைக்குமா?

நீக்ரோவரில் பழையவராயினும் சரி, புதியவராயினும் சரி, அடிமைப் படுகுழியிலே வீழ்ந்து பரிதவித்துக் கொண்டிருந்தனர். தென் நாட்டினரோ வயலும் வளமும் பெருக்கி உடலும் உரமும் பெற்றுத்தலைநிமிர்ந்தனர். விளைவு தந்தவன் விலங்குக் கொட்டிலிலே கிடக்கின்றான்; விலாநிமிர உண்பவன் பஞ்சுக் கட்டிலிலே புரள்கின்றான். கொடுமைக் காட்சிகள்!

தென்னாடும் வடநாடும்

தென்னாட்டவர் கொண்டிருந்த அடிமைக்கட்டுப் பாட்டை வடநாட்டவர் ஏன் கொண்டிருக்கவில்லை? "ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமமே" என்னும் அருள்வழி கண்டனரா? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் அறவழி நின்றனரா? கருணைப் பிழம்பாகிக் "கசிந்து கண்ணீர் மல்கி அடாத செயல் என்று ஒதுக்கினரா? "ஆடு மாடா இந்த அடிமைகள்” என்று அறிவொளி குத்திக் காட்டியதா? "சே! சே! உழைக்க ஒருவன் அதைக்கொண்டு பிழைக்க ஒருவன்; கூடாது கூடாது!" என்ற கொள்கைச் சுடர் கொப்புளித்து எழுந்ததா? " தன்கையே தனக்குதவி" என்னும் தறுகண்மை தலைதூக்கியதா? இல்லை!