உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

219

தாமோதரர் தோழமை அருளார் சரவணர்க்கு வாய்த்திலது என்றால், எங்களுக்கு இச்சிந்தனை வரும் வளாகம் காண வாய்க்காமல் போயிருக்கவும் கூடுமல்லவா!

இரவு, சிற்றுண்டி தாமோதரனார் மனையிலேயே முடித்துக் கொண்டு விருந்தினர் விடுதியில் தங்கினோம்!

படைத்துறை வளாகத் தங்கலில் பல நன்மைகள்: 1. அமைந்த சூழல் 2. நல்ல உணவு 3. காலக் கடைப்பிடி. 4. இன்று சலவைக்குப் போட்டது இன்று மாலையே சலவை செய்து தேய்ப்புடன் வந்து விடுதல் என்பன. மேலும் ஒன்று விடுதிக் கட்டணம் உணவுச் செலவு குறைவு.

இரவு தங்கிக் காலையில் புறப்படும் திட்டம்

2.3.2009

விடியலில் எழுந்து கடமைகளை முடித்துச் சுற்றுலாவைத் தொடங்கினோம். சாரல் தாமோதரனார் இல்லத்தில் இருந்தார். அவரை அழைத்துக் கொண்டு தாமோதரனார் குடும்பத்தில் சொல்லி விடைபெற்றுக் கொண்டு அவர் வழிகாட்டுதல் படி புறப்பட்டோம்.

நாங்கள் அனைவரும் முதல் நாள் மாலையில் பேரங்காடி சென்ற போதே அருளுக்குச் சில நூல்களை வேலாயுதனார் வாங்கினார். தாமோதரனார் இராசத்தான ஆடவர் மகளிர் சிலைகள் வாங்கினார். அச்சிலைகளை எனக்கு ஓர் இணையும், வேலாயுதர்க்கு ஓர் இணையும் தாமோதரர் குடும்பத்தவர் நினைவுப் பொருளாக வழங்கினர். நாங்கள் அவர்களுக்கு நினைவுப் பொருளாக வாழ்வியல் உரை, பார்க்குமிடமெல்லாம் பல்கலைக் கழகம், திருக்குறள் போற்றி என்பவற்றை வழங்கினோம்! நெஞ்சநினைவு உயர்ந்ததே எனினும் சில பொருள் நினைவுகளும் உலகியலில் வேண்டத் தக்க தாகவே உள்ளன.

தாமோதரர் இல்லத்தார் வழங்கிய பொம்மைகள் அச் செலவை யன்றியும் பார்க்கும் போதெல்லாம் தாமோதரனார் குடும்பத்தை நினைவூட்டுகின்றது. பின்னர் அதனைக் காண்பார்க்கு அச்செலவையும் அவர்கள் கொடையையும் நினைவூட்டுவதாகவே அமைந்து விடுகின்றது அல்லவா!

செய்சல்மர் நோக்கி வண்டிஓடியது.