உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

இந்த அவலக் காட்சியைக் கண்கொண்டு பார்க்க முடியாது. குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு குழந்தையைத் தரமறுக்கும், அந்தப் பெற்ற மனம். அதற்காக விட்டுவிடுவார்களா? பால்மணம் மாறாப் பச்சிளம் குழந்தை பறித்தெடுக்கப்பட்டு விலைக்கிடங்கிற்குக் கொண்டு போகப்படும். "அம்மா! அம்மா!!" என்று கதறும் குழந்தை! அலறியடித்துக் கொண்டு புரளும். மணிவயிற்றிலே அணைத்துக் காத்துவந்த மாசில்லாக் குழந்தைக்கு மாதாவின் முன்னிலையிலே விலங்கிடப்படும்.

"ஐயோ! மகனே, உலகுக்கு வந்ததும் வராதது மாய் என்னடா தீங்கு புரிந்துவிட்டாய், என்னைப் பிரிந்து செல்ல! பிள்ளைக் கனியமுதே ! நீ என்னடா பிழை செய்திருக்க முடியும், இக் கொடுமைக்கு ஆளாக! கள்ளம் கபடம் அறியாப் பருவத்துச் செல்வமே, உள்ளத்தைப் பிரித்தாரடா; உறவைப் பிரித்தாரடா; உயிரைப் பிரித்தாரடா' உறவைப் பிரித்தாரடா; உயிரைப் பிரித்தாரடா" என்று ஓல மிடுவாள் தாய். "என் குல விளக்கைக் கெடுத்தவள் நான்தான், நான் தான்" என்று பெற்ற வயிற்றிலே அறைபோட்டுக் கொள்வாள். முட்டி மோதிக் கொள்வாள். விலங்கேந்திய கரத்தோடு குழந்தை வீரிட்டழும். இந் நிலைமையிலே குழந்தை இழுத்துச் செல்லப்படும். மற்றொரு பக்கத்தே கலங்கிய கண்ணோடும், நடுங்கிய நெஞ்சோடும் நின்று கொண்டிருப்பான் நீக்ரோ ஆண் மகன். கண்ணீர் விடக் கருணை இருக்கிறது அவனிடம்; கண்டித்துக் கேட்க உரிமை இல்லை.

நீதிக்குச் சிறை

பண்ணையாளரைக் கண்டித்துக் கேட்கவே உரிமையற்ற அவன் நீதி மன்றம்செல்வது முடியாத காரியம். நீதி மன்றம் செல்லும் எண்ணமே நீக்ரோவுக்கு வருவது இல்லை. அப்படியே எண்ணம் வந்து விட்டாலும் அவன் எழுத்து மூலமாக முறையிட்டுக் கொள்ள, எழுதப் படிக்கத் தெரியாது. எழுதவும் படிக்கவும் எப்படியோ அறிந்து கொண்டிருந்தாலும் கூட வழக்காடப் பணம் கிடையாது. இவ்வளவும் எவருதவியாலோ கிடைத்து விட்டது என்றாலும்கூட, கொடுத்த மனு கொடுத்த போதே தள்ளுபடியாக் கப்பட்டுக் குப்பைத் தொட்டிக்குப் போய்ச் சேரும். அடிமையின் சுதந்திர வேட்கையை அவன் பண்ணையாளர் அறிந்துவிட்டாலோ கடும் வேலை; கசையடி; ஏச்சு பழிப்பு எல்லாம் கிடைக்கும். விற்று விடுவதும்உண்டு வேறொருவருக்கு.