உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

13

அடிமையை விலை கூறி விட்டால் போதும்; தோளில் குத்திப் பார்ப்பார்கள் பலம்இருக்கிறதா என்றறிய; சுமை ஏற்றிப் பார்ப்பார்கள் உரம் இருக்கிறதா என்று தெளிய; ஓடச்சொல்லி விரட்டியடிப்பார்கள் கால் கதியை அளவிட; பல்லைப் பிடித்துப் பார்ப்பார்கள் பாடுபடுவானா பல காலம், மாடு போலாக என்பதைத் தெரிந்து கொள்ள; உற்றுப் பார்ப்பார்; உறுத்துப் பார்ப்பார்; உதைத்துப் பார்ப்பார் -பொறுமையாக இருக்கிறானா என்று முடிவுகட்ட; இவ்வளவு சோதனை களிலும்வெற்றியுற்ற பின்னரே விலைப் பேச்சு; ஏல ஏற்பாடு! அந்தோ அடிமையே! அருளாளர் தோன்றுதல்

அடிமை வாழ்வை எண்ணி ஏங்கும் அருளாளர் அங்கொரு வரும் இங்கொருவருமாகத் தலை காட்டாமலும் இல்லை. அவர்கள் அடிமையாக்குவது அடாதது என்று அருட்பாணியிலே குரலெடுத்தனர். அந்த அந்த இடங்களிலே அவர்களுக்கு வாயாப்புக் கிடைத்தது; பொல்லாங்கு ஏற்றப்பட்டது. போன போன பக்க மெல்லாம் வசைமாரி பொழியப் பட்டது.

66

"அடிமை கூடாது என்கிறான் அறிவற்றவன்! அனைவரும் சமம் என்கிறான் அகம்பாவி! அறம் பார்க்கிறானாம் அறம்! ஆழக் குழி தோண்டிப் புதைக்கப் படவேண்டியவன் ஆடியலைந்து இன்னும் நடமாடித் திரிகின்றான்! தனக்குத் தான் எழுதுவதற்குத் தெரியும் என்று கிறுக்குகின்றான்; பேசுவதற்குத் தெரியும் என்று பொரிகின்றான். படைவெள்ளம் திரண்டு விட்டால் அவன் பாடு என்னாகும்? எச்சரிக்கை!" என்று எக்காளமிட்டனர். அதற்கும் மிஞ்சினால் நையப் புடைத்தனர்; மேலும் கிளர்ச்சி ஏற்பட்டால் நரம்பு நரம்பாகப் பிரித்து எடுத்தனர்; தோலை உரித்துத் தொங்கப் போட்டனர்; எழுதிய கையை நறுக்கினர்; எழுதப்பட்ட தாளை எரித்தனர்; அலுவலகங்களைச் சூறையிட்டு எரி நெருப்புக் கிரையாக்கினர். இவ்வளவும் இடை விடாது ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும், இடையிடையே அருளாளர் உள்ளத்தே அடிமை நீக்க வெள்ளம் பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தது. 'அணு அணுவாகச் சிதைத்தாலும் தவற்றைத்தவறென்றே கூறுவேன்” என்று தலை தூக்கிக் கொண்டிருந்தனர்.