உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

வழக்கறிஞர்

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

வழக்கறிஞராக லிங்கன் ஸ்பிரிங் பீல்டு செல்லக் கூடிய காலத்தில் கையில் இருந்தது ஏழே ஏழு டாலர்கள் தாம். வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிக் கொள்வதற்கான பணம்கூடக் கையில் இல்லை. லிங்கனின் ஏழ்மை நிலையைக் கண்ட நண்பர் ஒருவர் னாமாகத் தங்குவதற்கு இடம் தந்ததுடன், தம் படுக்கையின் ஒரு பகுதியில் படுத்துக் கொள்ளவும் உரிமை தந்தார். அதேபடுக்கையில் லிங்கன் மாதக்கணக்காகப் படுத்திருந்திருக்கிறார்; உணவுக்கும் அந்த நண்பரும் பிறிதொருவரும் வகை செய்தார்கள். லிங்கனுக்கு ஏதேனும் பணம் கிடைக்குமானால் கிடைத்ததைக் கொண்டு போய் நண்பர்களிடம் கொடுத்து விடுவார்.

அலைந்த பிழைப்பு

இப்போதைய நீதிமன்றங்கள் போல் அக்காலம் அமெரிக்காவில் நீதிமன்றங்கள் இல்லை. ஊர் ஊராக வழக்கறிஞர்கள் சென்று அங்கங்கே உள்ள சத்திரம் சாவடிகளில் தங்கி நீதி வழங்கி வந்தனர். அதனால் வழக்கறிஞர்லிங்கன் பிழைப்பு, அலைந்த பிழைப்பாகப் போய்விட்டது.

வழக்கறிஞர்களில் பலர் குதிரைகளிலும் வண்டிகளிலும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வந்தனர். ஆனால் லிங்கனோ எத்தனை கல்களானாலும் நடந்தே போனார். சக்தியும் சேறும் நிறைந்த சாலைகளிலும், அளறு படிந்த ஆறுகளிலும் நடந்து நடந்து உடையெல்லாம் அழுக்கேறிப் போய்விடும். "புகை போக்கி போன்று நீண்டு அழுக்கேறிய கால்சட்டை" என்று வழக்காள நண்பர்கள் நையாண்டி செய்யும் பொருளாக நம் லிங்கன் விளங்கியிருக்கிறார். ஆனால், அதனையும் மகிழ்வாக ஏற்றிருக்கிறார் பிறர் மகிழ்வுக்காக!

தொண்டர் ஆபிரகாம்

வண்டியில் நண்பர்களோடு சென்றாலும் ஒழுங்கற்ற பாதைகளில் வண்டிக்கு வழிகாட்டுவதும், வழியிலே ஏதேனும் தடையிருந்தால் நீக்கி வைப்பதும் லிங்கன்தான். தாம் எவ்விதக் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானாலும் குற்றமில்லை. மற்றவர்களாவது அதைக் கொண்டு மகிழ்ச்சியடையட்டும் என்ற பேரெண்ணப் பெரியராக லிங்கன் இருந்தார் அல்லவா?