உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

பெரும்பாலும் தம் காரியாலயத்திற்கு வருவதோ வழக்குகளைப் பற்றி ஆராய்வதோ கிடையா. அவர் அப்பொழுது அரசியலிலே தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதனால் காரியாலயப்பணியும் வழக்காடும் பொறுப்பும் லிங்கனுக்கே இருந்தன. நன்றியுடைமை காரணமாக லிங்கனே அத்தனை தொழில்களையும் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் கென்டன் என்பவரையும் பங்காளியாகச் சேர்த்துக்கொண்டு வழக்காடினார். தாம் வெள்ளைமாளிகைக்குப் போகுமளவும் லிங்கன் கென்டனுடன் சேர்ந்துதான் வழக்காடி வந்தார்.

வழக்குக்கு வழக்கு

லிங்கன் எந்த வழக்கையும் எளிதில் எடுத்துக் கொள்ள மாட்டார். நன்றாக விசாரித்தறிந்து நீதிக்கு முரண்படாததாய் வெற்றி தருவதாய் இருக்கும் வழக்குகளையே எடுத்துக்கொள்வார். எத்தனையோ நீதியான வழக்குகளை, எவரும் தம்மை நாடிவராத நிலைமையில்கூடப் பயன்எதிர்பாராது எடுத்து நடத்தி வெற்றி தந்திருக்கிறார். லிங்கன் தம்மிடம் வரும் வழக்கின் பெறுமானத்தைக் கொண்டு பணம் வாங்க மாட்டார். வாதாடுவதற்கு ஆகும் நேரத்தைக் கொண்டே தொகை வாங்குவார். அவர் வாங்கிய தொகை உடன் வழக்கறிஞருக்கும், மற்ற வழக்கறிஞர்களுக்கும், வெறுப்பூட்டுவதாக இருந்தது. லிங்கன் தம் தரத்தைக் குறைத்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர்.

நிறமன்று; நீதி

நீக்ரோவர் ஏதேனும் வழக்குக் கொண்டுவரின் அவ்வழக்கை ஏற்று நடத்துவது இழுக்கு என்பது. வழக்கறிஞர்களின் ஒருமித்த கோட்பாடாக இருந்தது. லிங்கனோ, "நீதி எவன் பக்கம் இருந்தாலும் அவன் பக்கத்தே நின்றுவாதாடுவதே வழக்கறிஞன் தொழில். நம் கண்களுக்கு ஆண்டானும் அடிமையுமாகத் தோன்றுவது போல நீதியின் கண்களுக்கும் தோன்றுவதில்லை. எனக்குத் தேவையான தெல்லாம் வழக்குக் கொண்டு வருபவனின் நிறமன்று; நீதி' என்று துணிந்து வாதாடப் புறப்பட்டார். வழக்கறிஞர்களெல்லாம் லிங்கன் ஆபத்திலே மாட்டிக் கொண்டு அல்லல்படுவார் என்று தீர்க்க தரிசனம் கூறிக்கொண்டிருந்தனர். அன்றைக் காலம் அப்படி இருந்தது. ஆனால் அம் முடிவுக்கு அசைபவரா ஆபிரகாம்!