உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வழக்கு

அண்ணல் ஆபிரகாம்

37

ஸ்காட் என்னும் நீக்ரோ ஒருவன் வடநாட்டைச் சேர்ந்தவன். சுதந்திரமாகத் திரிந்துவந்தவன். அவனைத் தென்னாட்டடிமை என்று கூறி வளைத்துப் பிடித்தனர். ஸ்காட்டோ தான் அடிமையாக இருந்ததில்லை என்றும், வடநாட்டில் எவரடிமையுமின்றிப் பல்லாண்டுகள் வாழ்ந்து வந்ததற்கு ஆதாரம் உண்டென்றும், வாதாடும் உரிமை தனக்கு வேண்டுமென்றும் நீதிமன்றத்திற்கு ஒரு விண்ணப்பமனுப்பி யிருந்தான். "நீக்ரோ ஒருவன் வெள்ளையர்களை எதிர்த்து நீதி கேட்பதா? அடிமையாகவே படைக்கப்பட்ட அவனுக்கு ஆகுமா இத்துணிவு? அடிமையர் விடுதலைக்கு ஆரம்பம் செய்கிறான் அற்பன்!" என்று பொங்கி எழுந்தார் நீதிபதி! நீதி மன்றமும் கொதித்தெழுந்தது. "நீ தரும்விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது; நீ அடிமையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிறவி அடிமை; அதை மாற்ற முடியாது" என்று விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது. இத்தள்ளுபடி நிகழ்ச்சியைச் செய்தித் தாளிலே கண்டு, "வெள்ளையனுக்கு ஒரு சட்டம் கறுப்பனுக்கு ஒரு சட்டமா? என்றெழுந்த கொதிப்பே லிங்கனைச் சட்டம் பயிலத் தூண்டியது; வழக்கறிஞராக ஆக்கியது. நீக்ரோவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சட்டம் படித்தலிங்கனுமா நீக்ரோவர் வழக்கை ஒதுக்குவார்? லிங்கனை உணர்ந்து கொள்ள நாடு இன்னும் தவறுகின்றது!

அறநெஞ்சம்

"நீதிமன்றத்திற்கு வராமலே வழக்குகளைத் தீர்த்துவைக்க வழக்கறிஞர்கள் முயலவேண்டும். அப்படித் தீர்த்துவைக்க முடியாத வழக்குகள் இருந்தால் தான் நீதிமன்றத்திற்குக் கொண்டுவர வேண்டும். இம்மாதிரி செய்வது நாட்டின் நலம் நாடக்கூடிய ஒவ்வொரு வழக்கறிஞரின் கடமையுமாகும்" என்பார் லிங்கன். "எதைப்பற்றியும் எமக்குக் கவலை இல்லை; எமக்கு வேண்டுவது பணமே" என்ற குறிக்கோளாளர்க்கு இது பிடிக்கவில்லை. பிறருக்குப் பிடிக்காமைக்காக லிங்கன் எந்தச் செயலையும் விட்டுவிடமாட்டார். அதனால், அவர் உடலமைப்பையும், விடாப்பிடியையும் கொண்டு "கொரில்லா" என்ற பட்டப்பெயரால் அழைக்க ஆரம்பித்தனர்.