உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

39

வாய்ப்பு வரும்போதெல்லாம் லிங்கன் நீக்ரோவர் விடுதலை பற்றிப் பேசினார்; எழுதினார்; விவாதித்தார். சட்ட மன்றத்தில் தம் கொள்கைகளை ஆதரிக்கக் கூடியவர்களை ஒன்று திரட்டினார். வடநாட்டிலே ஆதரவுவளர்ந்தது; தென்னாட்டிலே பகை பெருகியது. எப்பொழுதும் "விடுதலை விடுதலை" என்றே முழங்கிக் கொண்டிருந்தார். அதனால் என்ன நேரும் என்பதையும் லிங்கன் உணராது போய்விடவில்லை. நன்றாக அறிந்திருந்தார்; நாளும் நினைவிலே கொண்டிருந்தார்.

காரிசான்

நீக்ரோவருக்கு விடுதலை வேண்டும்" என்று எழுதிய காரிசான் என்ன ஆனார்; லிபரேடர் பத்திரிகை என்ன ஆனது; காரியாலயம் தான் என்ன ஆனது, என்பதை லிங்கன் மறந்து விடவில்லை. உணர்ச்சியை வெளிக்காட்டத் தொடங்கினார் காரிசான்."அடிமை வழக்கம் அமெரிக்க நாட்டை விட்டு அகல வேண்டும்; ஆண்டவன் படைப்பில் ஏற்றத்தாழ்வு இல்லாதபோது ஏனிந்தக்கெடுமதி” என்று கேட்டார் தம் லிபரேடர் பத்திரிகையிலே. உள்ளத்தே ஒடுக்கி வைத்திருக்காது உணர்ச்சியை உரைக்க ஆரம்பித்தார் காரிசான். அவ்வளவுதான், கொதித்தெழுந்தது கூட்டம்! காரிசானைச் சூழ்ந்து கொண்டு கண்டபடி வாட்டி வதைத்தது. உயிரைப் போக்கி விட்டிருக்கும் காரிசான் மட்டும் இன்னும் ஒருநொடி நேரம் தப்பிச் செல்லாது இருந்திருந்தால்! காரிசான் தப்பிவிட்டார் என்றறிந்தது கூட்டம். காரியாலயத்தின் மேல் படையெடுத்தது. அந்தோ! காரிசான் உயர்வை வெளிப்படுத்த ஒரே ஒரு கருவியாக இருந்த காரியாலயம் சிதைக்கப்பட்டது. கருவிகள் உடைக்கப்பட்டன. கனலுக்கு இடையே காரியாலயம். கலங்கலுக்கிடையே காரிசான்!

இவ்வளவோடு விட்டதா கூட்டம்! காரிசானுக்கு ஆதரவாக இருப்பவர்களைத் தேடிப்பிடித்து இரத்தக் கொடை வாங்கிக் கொண்டது; கொன்று தீர்த்துங் கொண்டது. இவற்றை யெல்லாம் அறியாதவரல்லர் லிங்கன். எதற்கும் துணிவாக இருந்தார். "உயிரைக் கொடுத்துத்தான் நீக்ரோவருக்கு விடுதலை தரவேண்டும் என்பது இறைவன் விருப்பமாக இருந்தால் அதைச் செய்யத் தயார்" என்ற முடிவினால் தான் விடுதலைக்காக முயன்றார்.