உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவுபட்ட கூரை

அண்ணல் ஆபிரகாம்

45

இந்நிலைமையிலே ஒட்டாவா நகரில் டக்ளஸ் லிங்கன் ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றி, தங்கள் தங்கள் கருத்துக்களை வாக்குவாதம் பண்ணுவதாக ஒருமுடிவுக்கு வந்தனர். டக்ளஸினிடம் பேச்சாற்றல் பெரிதும் இருந்தாலும் கூட நீதி தம்மிடமே இருக்கிறது என்ற துணிவு லிங்கனைத் தேற்றுதல் செய்து கொண்டிருந்தது. லிங்கன் பேசுவதற்குரிய ஆதாரங்களை யெல்லாம் சேகரித்துக் கொண்டு மேடைக்குச் சென்றார்.

"பிரிவுபட்ட கூரை நெடுநாளைக்கு நில்லாது. அதுபோலப் பிளவுபட்ட அரசும் நெடுநாளைக்கு நிலைக்காது" என்று குரலெழுப்பினார். அதே நேரம், "விடுதலை என்பது எந் நாட்டவர்க்கும் எவ்வினத்தவர்க்கும் ஏற்பட்ட பிறப்புரிமை. நீக்ரோவின்மேல் வெறுப்பு ஏற்படுகின்றது என்றால் விட்டு விடுங்கள் அவன் போக்குப்படி. இறைவன் அவனுக்களித்த அருட்கொடை அணுவளவேயாயினும் அதனைக் கொண்டு வாழட்டும். விடுதலை மனித குலத்தின் பொது உரிமை! ஆனால், அடக்கு முறையோ ஆள்வோரின் சுயநலம்! ஒருவர் தேட ஒருவர் உண்பது என்னும் கொடுஞ்செயல் நம்மால் ஒழிக்கப்பட்டே தீர வேண்டும்."

"தனிப்பட்ட ஒருவர் பெறவேண்டிய வெற்றி தோல்வி பற்றியதன்று நம்கவலை. எத்தகைய இன்னல்களுக்கிடையே நம்முன்னோர் நம் தாயகத்திற்குச் சுதந்திரம் வாங்கினர்? அவர்கள் உணவையேனும் உடையையேனும் காலுறைகளை யேனும் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டு வாளா இருந்திருப் பார்களே யானால் சுதந்திரக் குடிகளாக மாறி இருப்பரா? அந்தச் சுதந்திரத் தாயகத்தை ஒன்றாகக் கட்டிக்காக்க வேண்டியதே நம் கடமையாகும்" என்று முழங்கினார். முடிவு என்ன?

தோல்வி

செனட் தேர்தலிலே ஆபிரகாம் தோல்வி! பிரிவு கொண்ட கூரை நில்லாது என்ற ஐக்கிய உரையே அவருக்குத் தோல்வி தந்ததெனத் தம் கட்சிக்காரர்களுக்குள்ளேயே கலகலப்பு ஏற்பட்டது. லிங்கனோ "எனக்கு நீதி எனப்பட்டதை எத்தனை எத்தனை ஏமாற்றங்கள் ஏற்பட்டாலும் சொல்லியே தீர்வேன்" என்று பதில் மொழிந்தார்.