உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

57

வேண்டுமல்லவா! உயிரை ஆக்க முடியாத நமக்கு அழிக்க என்ன உரிமை உண்டு?" என்று பிறர் கூச்சலுக்கு மூடி இடுவார்.

உயிருக்கு உயிர்

பாடி வீட்டின் வாயில் காத்து வந்த வீரன் ஒருவன் தூங்கி விட்டான். அதற்குத் தளபதி தந்த தண்டம் மரணம்! நாட்டிற் குழைக்க நிற்கும் நல்லதொரு வீரனை இழக்க மனமில்லா வீர லிங்கன் விடுதலை தந்தார். அவனோ போர்க்களம் சென்று பகைவரைச் சின்னா பின்னப் படுத்தினான். படைகளைத் திக்குமுக்காடச் செய்தான். இறுதியிலே மார்பில் குண்டு தாங்கி மலர்ந்த முகத்தோடு "உயிரீந்த உத்தமர்க்கு உயிர்தந்தேன்; உரையுங்கள் அவரிடம்" என்று நடந்துவிட்டான் மரணப் பாதை! இத்தகைய வீரர்களின் வதனமும் வாழ்க்கையும் லிங்கனின் மனக்கண்முன் வந்து பேய்க்கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும். நேரத்தே லிங்கன் இருந்தது தூய வெள்ளை மாளிகையல்ல; உயிர்க் கொள்ளை மாளிகைதான்!

பிரிட்டனின் அச்சுறுத்தல்

பிரிட்டன் கப்பலொன்றில் அமெரிக்த் தூதர் இருவர் பயணமாகிக் கொண்டிருக்கும் செய்தி லிங்கனுக்கு அறிய வந்தது. உடனே கப்பலை நிறுத்தித் தூதர்களைக் கைது செய்து வரும்படி உத்தரவிட்டார். இச்செயல் தங்களை அவமானப்படுத்துவதாகும் என்றும், அதற்குரிய பதில் விடுத்துமன்னிப்புக் கோராவிடில் பகை ஏற்படும் என்றும் பிரிட்டன் அச்சுறுத்திக் கடிதத்தின் மேல் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தது.

ஐக்கிய அமைப்பின் போர்த்துறையமைச்சர் ஊழல் பலவற்றுக் கிடமானவராகப் போய்விட்டார். அவரைப் பதவியிலிருந்து நீக்கி, தக்கவர் ஒருவரை அமைச்சுத் துறையில் நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. இவ்வளவும் காணாது என்று மைந்தன் ஒருவனின் மரணச் செய்தியும் அலைத்துக் குலைத்துக் கொண்டிருந்தது.

"லிங்கன் தவிர மற்றொருவர் இந்தச் சூழலிலே ஆட்பட்டு இருப்பரேயானால் செத்தே போயிருப்பர்" என்று ஒருவர் வாய்விட்டு உரைத்தார் லிங்கனின் பரிதாப நிலைகண்டு."டக்ளஸ்" இந்தத் தொல்லையைக் கண்டு தலைவராக வராமைக்காகத் தம்மைத் தாமே பாராட்டிக்கொண்டார் என்றால் லிங்கனின் நிலை எத்தகையதாக இருந்திருக்கக் கூடும்!