உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பொற்சிலைப் புனிதன்

வறுமையிலே பிறந்து வறுமையிலே வளர்ந்து வறுமையிலே வாழ்ந்த லிங்கன் சீரும் செல்வமும் கொழிக்கும் அமெரிக்க நாட்டின் தலைவராக ஒருமுறைக் கிருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குக் காரணமாக இருந்தது அவருடைய பண்புடைமை தான். உலகியல் அறிவு வாய்க்கப் பெற்ற காலம் முதல் எதைச் செய்தால் நல்லதோ அதை, எம்முறையால் செய்து முடித்தால் நல்லதோ அம்முறையால் செய்து முடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டி ருந்தார். அதனால் பேரும் புகழும் தாமாகவே வந்தடைந்தன. மனித குலத்துக்கொரு மாபெரும் எடுத்துக் காட்டு என்று இன்று மக்கள் குலம் பேசுகின்றது. அவர் வழி நிற்பதிலே பெருமை காண்கின்றது. இறையன்பு

இறையன்பிலே ஆபிரகாமுக்கு ஈடுபாடு நிறைய இருந்தது. எண்ணும் எண்ணமும் எழுதும் எழுத்தும் பேசும் பேச்சும் இறைம் யமாகவே திகழ்ந்தன. எத்தனை எத்தனை இடங்களில் திருமறைச் சொற்றொடர்களை மேற்கோள் காட்ட முடியுமோ அத்தனை அத்தனை இடங்களில் மேற்கோள் காட்டினார். பெரும் பெரும் பொறுப்பேற்றுக் கொண்ட பொழுதுகளிலெல்லாம் "இறையருள் இன்றேல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது" என்று தெளிவாக வெளியிட்டார். எவரையேனும் பிரிய நேர்ந்தாலும் வாழ்த்த நேர்ந்தாலும் கடவுள் காக்க" என்று கையருள் காட்டினார். அன்னையர் அன்பளிப்பாகத் தந்த திருமறையைப் புனிதப் பொருளாகப் போற்றி இறுதிவரை தம்மைவிட்டு அகலாதவாறு காத்து வந்தார். உலக வாழ்வை நீத்த பெற்றவர்க்கும் மற்றவர்க்கும் புனிதத் தன்மைதர இறைவனிடம் முறையிட்டுக் கொண்டார். ஒரு முறை, "ஆண்டவரே! நீர் மனிதராகப் பிறந்திருந்தால் உம் ஆண்டவரிடம் எதை வேண்டிக்கொள்வீரோ அதை உம் மக்களுக்கும் தந்தருளும்" என்று வேண்டினார். இவ்வேண்டுதலால் ஆபிரகாம் இறைவனை "நல்லனவே செய்யும் நம்பன்" என்று நம்பியமை புலப்படுகின்றது.