உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

83

பகையும் உண்டாயின; நண்பர்களைத் தழுவி வரவேற்று மகிழ்ந்தது போலவே, பகைவரை ஒழித்து இன்புற்றனர். தம் பகையை ஒழிக்க அவர்கள் பயன்படுத்திய கருவிகள் கற்களேயாம்.

கற்களால் எறிந்தும், பின்னர் அவற்றைத் தேய்த்துக் கூராக்கி வெட்டியும் குத்தியும் தம் பகைவருடன் போரிட்டனர். அறிவு மேலும் வளரத் தொடங்கியது; சில உலோகங்களைக் கண்டு பிடித்தனர். அவற்றால் கத்தி, வேல், வாள், ஈட்டி,அம்பு முதலிய கருவிகளைக் கண்டனர். காட்டு விலங்குகளையும், வானப்பறவை களையும் தம் வயிற்றுப் பாட்டுக்காக வேட்டையாடித் தீர்த்தனர். அதே கருவிகளைத் திருப்பித் தம் பகைவர் மேலும் ஏவினர்.

இத்தகைய போராட்டங்களில் நேரில் நின்று போரில் தலைப்பட்டவரே தாக்கப்பட்டனர், ஒதுங்கி நிற்பவர், ஒளிந்து நிற்பவர் எவரும் தாக்கப்பட்டார் அல்லர். எட்டநிற்பவரும், எதிரிட்டு நில்லாதவரும் வதைக்கப்பட்டார் அல்லர். வீட்டிலே கடமை புரிபவர், வயலிலே வேலை செய்பவர், தொழிற்கூடங் களிலே பணியாற்றுபவர், கடைத் தெருக்களிலே கடமை பேணுபவர், பள்ளிகளிலே பயில்பவர், அமைதித் தொண்டு செய்தற்காக முன்னிற்பவர் எவரும் தாக்கப்பட்டார் அல்லர்.

நெறி முறை :

நாள் செல்லச் செல்லப்போர்க்கென நெறிமுறைகள் வகுக்கப் பெற்றன. நெறிமுறைகளைப் போற்றிப் போரிடுவோரே அறப் போராளிகளாகக் கருதிப் போற்றப் பெற்றனர். அல்லோர், பழித்தும் இழித்தும் பேசப்பெற்றனர். காலம் குறிப்பிட்டு இடம் குறிப்பிட்டுப், படையளவு குறிப்பிட்டுப் போர் தொடங்கினர். போரில் தலைப்படாதவர்கள் போர் நிகழ்ச்சி என ஒன்று இருப்பதையே அறியாமல் கூட அமைதியாக வாழ முடிந்தது.

போர்நெறி வகுக்கப்பெற்ற பின், கண்டவரை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தாக்கினர் இல்லை. பரிமேல் இருப்பவன்; பரிமேல் இருப்பவனையே தாக்கினான். கரிமேல் இருப்பவன், கரிமேல் இருப்பவனையே தாக்கினான். தேர்மேல் இருப்பவன் தேர்மேல் இருப்பவனையே தாக்கினான். வாள்வீரன் வாள் வீரனோடும், வேலாளி வேலாளியுடனும், வில்லாளி வில்லாளி