உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

யுடனும், மல்லன் மல்லனோடும் போரிட்டான். தாக்குங்கால் கருவியை இழந்தாலும், அச்சத்தால் கண்களை மூடினாலும் போரிடுதல் ஒழிந்தனர். ஆடை அவிழ்ந்தாலும், குடுமி நெகிழ்ந் தாலும் தாக்குதல் தவிர்ந்தனர்.

"போரில் பட்டு அழிதற்கு வேண்டாத பசுக்களையும், பசுக்களன்ன அமைதியுடைய அறவோரையும், மெல்லியல் நங்கை யரையும், இளங்குழந்தைகளையும் போர்க்களத்தில் இருந்து விலக்கிப் பாதுகாப்பா இடத்தைச் சேரச்செய்து அதன் பின்னரே போர் தொடங்கவேண்டும்' என்பது நம் இலக்கிய இலக்கணங்கள் காட்டும் நெறிமுறை. இத்தகைய நெறியமைந்த போராலும் உயிர்க்கு அழிவு உண்டு என்றால்கூட, போரை விரும்பாதவர் களும், போர்க்கு அஞ்சுபவர்களும் அழிவுக்கு ஆட்படாமல் ஒதுங்கலாம் அல்லவா! அன்றியும், 'புறமுதுகில் தாக்குவது போன்ற புன்மை வேறு இல்லை' என்னும் போர்நெறி திகழ்ந்த அந்நாளில், புறங்காட்டி ஓடுவாரே எத்தகைய இழப்புக்கும் ஆளாகமாட்டார் என்னும்போது, போர்க்களத்திற்கு வாராதவர் அழிவாரா?

இது முன்னை நிலைமை; இன்று இந் நிலைமை உண்டா? காலம் குறிப்பிடல் உண்டா? களம் குறித்தல் உண்டா? நேருக்கு நேர் நின்று போரிடல் தான் உண்டா? எவையும் இல்லை.

அறிவியல் ஆட்டம் :

மனிதன் கால் நடையில் போனான். பின்னர்க் கட்டை வண்டியில் போனான். அதனை நாகரிகம் என்றோம்; கட்டை வண்டியினும் விரைந்து செல்லும் வில் வண்டிகளையும், மிதி வண்டிகளையும் கண்டதை நாகரிக வளர்ச்சி என்றோம்; கூரிய மூளையாளன் உந்து வண்டி, புகை வண்டி, வானூர்தி கண்ட போது நாகரிக முதிர்ச்சி என்றோம்; அந்த நாகரிக முதிர்ச்சி மனிதன் மண்ணில் இருந்து திங்கள் மண்டலத்திற்குச் சென்று வரும் அளவுக்குப் பெருகியதையும், ஞாயிற்று மண்டலத்தில் புள்ளிவைக்கும் அளவுக்கு விரிந்ததையும் கண்டு "ஓ! ஓ! என்னே நாகரிக ஏற்றம்?" என்று மூக்கில் விரல் வைத்து நோக்குகிறோம். ஆனால் அந் நாகரிகம் கோடி கோடிப்பேர்களை நொடிப் பொழுதுக்குள் மண்ணுக்குள் மண்ணாகிப் பேயாட்டம்

1. புறநானூறு:9