உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

பேராண்மை

வெள்ளாட்டுக் கடா ஒன்று.

கண்டால், கருதிநோக்கத் தக்க எடுப்பான தோற்றம்.

தெருவில் வந்தது.

ஒரு நாய் குரைத்துக் கொண்டு ஓடி வந்தது.

கடா, நடையை நிறுத்தி நின்றது.

நாய், நிறுத்தாமல் குரைத்தது.

நாய்க் கூட்டம் - ஒன்று இரண்டு என ஏழெட்டு வந்து விட்டன. எட்டத்தில் காட்டிய வீறாப்பு, கிட்டத்தில் இல்லை! எல்லா நாய்களும் எட்டத்தில் நின்றே வாய் கிழியக் குரைத்தன. கடா அசையவில்லை.

அசையா வீறு நாய்களை அணுக விடவில்லை.

குரைத்துக் குரைத்துப் பார்த்தன நாய்கள்.

ஓடி ஓடி வந்து சுற்றிச் சுற்றிக் குரைத்தன.

ஒன்று ஒன்றாய் ஓய்ந்து போயின, ஒதுங்கிப் போயின.

நாய்கள் எல்லாம் போனபின், எடுத்த தலையொடும் எழுச்சி நடையொடும் கடா நடந்தது!

முட்டவில்லை! மோதவில்லை - கடா

அசையா வீறு காட்டியது!

அச்சமூட்டியது நாய்களுக்கு!

எதிரிட்டுத் தாக்காமலே எழுச்சியுள்ளத்தால் எதிரியை வெற்றி கொள்வது ஆண்மையில் ஆண்மையாம் பேராண்மை அன்றோ!

வெற்றியும் தோல்வியும்

மாந்தன், மண்ணைப் பேச வைக்கிறான்.

நீரைப் பேச வைக்கிறான்.

தோலையும் நரம்பையும் கம்பியையும் பேசவைக்கிறான்.

கல்லையும் புல்லையும் பேச வைக்கிறான்.