உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

வானத்தில் கோடிட்டு

வரைந்தொளியும் இளம்பிள்ளை!

ஏறிட்டுப் பார்க்குமுனர்

எழில்காட்டி வயப்படுத்திக்

கூறிட்டுக் கொள்கின்ற

கொடுங்கொள்ளைக் கைகாரி!

யானோக்கி மெல்லநகத்

தானோக்கி நிலனோக்கி

மேனோக்கக் காணாத

மானோக்கி! மயல்நோக்கி!

'இடமணித்தாம் இவண்வருக'

என அழைத்துத் தொடருங்கால்

தொடமுடியாத் தொடுவானத்

தொலைக்கேகும் பெருங்கள்ளி!

பிறைவட்டப் பெருநிலத்தில்

அரைவட்டச் சாலடித்துத்

துறைபட்ட கைத்திறனால்

தொழஉழுத பேருழவு!

காரிக்கு நேரொத்த

ஓரிக்கு வாயாமல்

மாரிக்கு வாய்த்தவொரு

மாட்டாத மாமணிவில்!

சேவடியைக் காட்டாமல்

செவ்வேளின் முன்னடையப்

பாவடியச் செல்கின்ற

காவடிப்பேர்க் காணிக்கை!

தலையாலங் கானத்துச்

செருவென்ற பாண்டியனார்

மலையாகம் புரள்கின்ற

மணிமாலை; மாமாலை!

ஒளிகோழி இட்டுள்ள

உடையாத அரைமுட்டை!

வளநூலால் நெய்யாத

வண்ணப்பேர்த் துப்பட்டி!