உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

127

இப்பொழுது எனக்குக் காலில் வலி இருப்பதால் நடந்துபோய்ப் படித்துக் காட்ட முடியாது. ஆதலால்தான், கடிதம் எழுத முடியாது என்கிறேன்" என்று விளக்கினார்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுதல் என்பது இப்படித்தானோ?

6. எதற்காக அழவேண்டும்?

நிலக்கிழான் ஒருவன் இருந்தான்; அவனிடம் வேலைக் காரன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் நோயால் இறந்து போனான். நிலக்கிழான் தன் வேலைக்காரன் இறந்ததற்கு அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஒன்றுமே நடக்காதது போல், உண்டான்,உறங்கினான், தன் வேலைகளைச் செய்தான். "என்ன கல் மனம் இவனுக்கு? உழைத்த ஒருவன் இறந்து போனதற்காகக் கூட எள்ளத்தனை இரக்கமும் இல்லாத இவன் கொடியன்; மிகக் கொடியன்" என்று ஊரார் பேசினர். ஊர்ப் பேச்சு நிலக்கிழான் செவியிலும் விழுந்தது. ஆனாலும் அதனைப்பற்றி அவன் கவலைப்படவில்லை.

சிறிது காலம் சென்றபின் அந்நிலக்கிழான் வைத்திருந்த மாடுகளில் ஒன்று செத்துப்போனது. நிலக்கிழான் தன் மாடு செத்ததற்காகப் படாப்பாடு பட்டான்; துடிதுடித்தான்; கண்ணீர் வடித்தான்; தலையிலும் மார்பிலும் அறைந்துகொண்டு அழுதான்; ஊரார்க்கு அந்நிலக்கிழான் செயல் வியப்பாக இருந்தது!

"வேலைக்காரன் இறந்ததற்காகச் சிறிதளவு கூடக் கவலைப்படாத இவன், மாடு செத்ததற்காக இப்படிக் கதறுகிறனே! மனிதனைப் பார்க்கிலும் மாடு என்ன அப்படி உயர்ந்ததா?" என எண்ணினர்.

அவனிடம் போய் ஒருவர் கேட்டுவிட்டார். அவன் சொன்னான்: "வேலைக்காரன் செத்தான்; அவன் செத்த அப்பொழுதே 'நான் வேலைக்கு வருகிறேன்; நான் வேலைக்கு வருகிறேன் என்று பலர் வந்து என் வீட்டு வாயிலில் காத்துக் கிடந்தனர். ஆனால், என் மாடு செத்தபோது எந்த மாடும் 'நான் வேலைக்கு வருகிறேன்' என்று வரவில்லையே! நானல்லவோ மாட்டைத் தேடிப்போய் பணம் போட்டு வாங்கிக்கொண்டு வரவேண்டியதாக இருக்கிறது? அதற்காக நான் கவலைப் படாமல் இருக்க முடியுமா?" என்றான்.