உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

பார்க்கிலும் அறியாதவையே மிகுதி என்பது விளக்கமாகும்.

அதனால் தான் திருவள்ளுவர்,

"அறிதோறும் அறியாமை கண்டற்று என்றார்.

11. உம்மைப்போலவே நானும்

நெப்போலியன் போரில் வெற்றி குவித்துக் கொண்டிருந்த காலம். அவன் படைத்தலைவருள் ஒருவன் நெப்போலியனிடம் வந்தான். அவன் மகிழ்ச்சி சிறிதும் இல்லாதவனாகத் தன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு மெல்ல நடந்து வந்தான். நெப்போலியன் முன் வந்து, தன் காலடியைப் பார்த்துக் கொண்டே, "தலைவரவர்களே, நாங்கள் நம் வெற்றிக்காக அரும்பாடுபடுகிறோம். பகல் இரவு, பனி வெயில், பசி நோய் - இவற்றையெல்லாம் பாராமல் நாட்டுக்காகப் போராடுகிறோம். எங்கள் உயிரையும் பொருட்டாக எண்ணாமல் துப்பாக்கி முனையில் நிற்கிறோம். இருந்தாலும் நம் படை வீரர்கள் எத்தனை பேர்கள்? படைகள் எங்கெங்குப் போர் முனைவில் நிற்கின்றன? நம் கருவிகள் மருந்துகள் எங்கெங்குக் குவிக்கப் பட்டிருக்கின்றன? இப்படிப்பட்ட செய்திகளை யெல்லாம் நாங்கள் அறியக் கூடவில்லை. நீங்கள் இவற்றை நாங்கள் அறியச் செய்யாதது, எங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையே காட்டுகின்றது," என்று வருந்தினான்.

நெப்போலியன் படைத்தலைவனைப் பார்த்து, "நீர் கேட்கும் செய்திகள் மறைவாக வைக்கத் தக்கவை; படைச் செய்திகள் வெளிப்படையாகி விடுமானால் அது நாட்டுக்குப் பெருந்துன்பத்தை விளைவிக்கும். ஆதலால் இவை கட்டாயம் மறைத்துக் காக்க வேண்டியவை என்பது படைத்திறம் தெரிந்த உமக்கும் நன்றாகத் தெரியுமே!" என்றான்.

"ஆம்; நன்றாகத் தெரியும்; நம் படைபற்றிய செய்தியைக் கட்டாயம் மறைவாகக் காப்பேன்; என்ன காரணம் கொண்டும் எவருக்கும் வெளிப்படுத்த மாட்டேன்" என்று உறுதி கூறுகிறேன் என்றான் படைத்தலைவன்.

'படைத்தலைவரே, உம் உறுதிப்பாட்டுக்கு மிக நன்றி. அப்படித்தான் சில செய்திகளை மறைத்துக் காப்பாற்ற வேண்டும். அவ்வகையில் உம்மைப்போலவே நானும் இருக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். நீர் மறைவாகக் காக்க நினைப்பது போலவே நானும் நினைக்கிறேன்; போய் வருக" என்று அனுப்பினான்.