உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

141

ஆனால், முல்லாவின் முகத்தில் சினக் குறிப்புச் சிறிதும் வெளிப்படவில்லை. "அறிஞர் பெருமானே, தங்களை வரச் சொல்லிவிட்டு நான் வீட்டில் இல்லாமல் வெளியே போய் விட்டது தவறுதான்; மாபெரும் தவறுதான்; தாங்கள் அருள்கூர்ந்து பொறுத்துக்கொள்ள வேண்டும். தாங்கள் எளியேன் வீட்டுக்கு வந்து திரும்பியதற்குச் சான்றாக என் வீட்டுக் கதவில் உங்கள் கையெழுத்தைப் போட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். அதனைப் பார்த்துத்தான் நீங்கள் என் வீட்டுக்கு வந்தீர்கள் என்பதைத் தெரிந்து ஓடோடி வந்தேன்" என்றார் முல்லா.

அப்பொழுதுதான் அறிஞருக்கு முல்லா எரிச்சல் படாத காரணம் புலப்பட்டது! 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' என்னும் பழமொழியை முல்லா மெய்யாக்கி விட்டார் அல்லவா! அறிஞர் முகத்தில் தண்ணீர் தெளித்துத்தானே மயக்கத்தைப் போக்க நேர்ந்திருக்கும்!

14. நான் ஊருக்குப் புதியன்

வேடிக்கையாகப் பலர் பல கூட்டங்களில் சொல்கிறார்கள். ஒருவன் ஓர் ஊர்க்குப் போனால், அவனுக்கு எதிரே வந்த ஒருவன்,"ஐயா ஞாயிறு பெரியதா? திங்கள் பெரியதா?" என்று அவனிடம் வினாவினான். அவனோ, "ஐயா நான் ஊருக்குப் புதியவன்; உள்ளூர்க்காரரிடம் கேளுங்கள்" என்றான் :

இதைப்போன்றே முல்லா கதையொன்று உள்ளது.

முல்லா ஓர் ஊருக்குப் போனார். அவரிடம் ஒருவன் "ஐயா, இன்று என்ன கிழமை?" என்று கேட்டான். முல்லாவோ, "ஐயா நான் அயலூர்க்காரன்; எனக்கு இந்த ஊர்க்கிழமை என்ன தெரியும்? உள்ளூர்க்காரரைப் பார்த்துக் கேளுங்கள்" என்றார்!

ஞாயிறு, திங்கள், கிழமை ஆகியவை அயலூர்க்காரர்க்குத் தெரியாதாம். உள்ளூர்க்காரருக்குத்தான் தெரியுமாம்! எப்படி வேடிக்கை!