உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

149

(4 உண்மையா? அது எளிமையானதாயிற்றே. அதை விளக்கிச் சொல்வதில் எந்தக் கடினமும் இல்லையே! நான் இதுவரைக்கும் ஒருமுறை கூடச் சொல்லாதது எதுவோ, இன்னும் என் வாழ்நாளில் ஒரு முறைகூடச் சொல்ல விரும்பாதது எதுவோ அதுவே உண்மை என்பதாகும் உண்மைக்கு இதனைப் பார்க்கிலும் உண்மையான விளக்கம் வேண்டுமா?" என்றார் முல்லா.

பெரியவர் முல்லாவின் உரையைக் கேட்டு விளக்கம் பெற்றாரோ! தம் தலையைப் பிடித்துக் கொண்டு பிய்த்தாரோ? உண்மை என்பது சொல்லுதற்கு எளியது! கடைப்பிடிப்பதற்கு அரியது. தன்னலம் கடந்த பொதுநலவுள்ளத்தில் தோன்றுவதே உண்மையல்லவா! அதனால் எளியதாகுமா?

19. அப்புக்கு இரு

காட்டுக்கு வேலைக்குச் சென்ற ஒருவர் கஞ்சிக் கலயத்தை ஒரு மரக்கிளையில் கட்டி வைத்துவிட்டுத் தம் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் அவர் மகனும் காட்டுக்கு வந்திருந்தான்.வெயில்வேளை ஆயிற்று. சிறுவனுக்குப் பசி ஏற்பட்டது. அவனுக்குக் கஞ்சிக் கலயம் காட்சியளித்தது.

ஒரு சிறு கல்லை எடுத்தான். குறிபார்த்துக் கலயத்தின் மேல் அடித்தான். அந்தக் கல் சரியாகக் கலயத்தைப் பொத்து விட்டது. கலயத்தில் இருந்து கஞ்சி தொளைவழியாக 'சர்' என்று ஒழுகியது. ஒழுகி வழிந்த கஞ்சியை, நிமிர்ந்து நின்று வாயைத் திறந்து குடித்தான் சிறுவன். அவன் எவ்வளவு குடிக்க முடியும்? வயிறு நிரம்பியதும் கஞ்சிக் கலயத்தை நோக்கி, "அப்புக்கு இரு, அப்புக்கு இரு" என்று கூறினான்.

தன் பங்கைக் குடித்தாயிற்று. தன் அப்பாவின் பசிக்குக் கஞ்சி இல்லாமல் போய்விடக் கூடாதே, என்ற கவலை உண்டாயிற்று. சிறுவன் சொன்னதற்காகக் கஞ்சி ஒழுகுவது நின்றுவிடுமா? 'நிற்காது' என்று அந்த இளைய உள்ளத்திற்குத் தோன்றாமல்தானே செல்கிறான் நடக்காததெல்லாம் நடக்கும்; பேசாததெல்லாம் பேசும்; எல்லாம் குழந்தை உலகத்திலே! இத்தகையதொரு கதை முல்லாவின் வாழ்விலும் இடம் பெற்றுள்ளது.

கோடைவெயில், கொடுமையாய் வாட்டியது; சுடு நெருப்புப் போலக் கொதித்தது. நீர் வேட்கை மிகுந்தது.