உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

உருவினேன். ஒன்று, இரண்டு என்று எண்ணும் நேரத்திற்குள் மூன்று தலைகளும் நிலத்தில் விழுந்து உருண்டன" என்றான்.

கூட்டம் கையொலி செய்து களிப்படைந்தது. வீரன் பெருமிதத்தால் தலைநிமிர்ந்து நின்றான். முல்லா, "நான் செய்த வீர மேம்பாட்டை நீங்கள் யாரும் அறியமாட்டீர்களே! இவ் வீரனைப் போல நான் சொல்லி தம்பட்டம் அடித்துக் கொள் வதில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். என்னை மோதி யழிக்க முரடன் ஒருவன் வந்தான். மோதிக் கொள்ளுமுன்னரே அவன் பின்னங்காலில் வாளைக் கொண்டு ஒரு போடு போட்டுத் துண்டாக்கினேன். அவ்வளவுதான்! அவன் ஒழிந்தான்" என்றார்.

"முல்லா! நீர் வீரர்தாம். முரடனின் தலையை வெட்டாமல் காலையேன் வெட்டினீர்" என்றான் கூட்டத்தில் இருந்த ஒருவன். "தலையிருந்தால் அதனை வெட்டாமல் காலை வெட்டுவதற்கு எனக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது? தலையை எனக்கு முன்பே எவனோ வெட்டிக் கொண்டு போய்விட்டானே!' என்றார்.கூட்டம் 'கொல்' என்று நகைத்தது.

23. நம்பச் செய்து கெடுத்தல்

ஓர் ஊரில் ஒரு துறவியிருந்தார். அவரிடம் ஓர் இளைஞன் மாணவனாக வந்தான். துறவியினிடம் கற்கவேண்டுவன வெல்லாம் கற்றுக் கொண்டு துறவியாகப் போவதாகக் கூறி அவரோடு தங்கினான்.

துறவி ஓர் ஊருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அந்த வீட்டுக்காரருடன் உரையாடிவிட்டுத் திரும்பினார்.

திரும்பிவரும்போது சிறிது தொலைவு சென்றதும் மாணவன் தன் தலையைத் தடவி ஒரு துரும்பை எடுத்தான். "ஐயோ, நான் என்ன பாவம் செய்து விட்டேன்; தங்குவதற்கு நிழலும், பருகுவதற்குப் பாலும் தந்த வீட்டுக்குக் கேடு செய்துவிட்டேன். உண்ட வீட்டிலே கெண்டிதூக்கியது போலவும், அன்னமிட்ட வீட்டிலே கன்னமிட்டது போலவும் ஆயிற்றே" என்று துரும்பைக் குருவுக்குக் காட்டி வருந்தினான். 'அந்த வீட்டாருடைய துரும்பு என் தலையில் தங்கிவிட்டது. நாம் தங்கியிருந்த வீட்டாருக்கு உரிமைப்பட்ட கூரைத் துரும்பை அங்கே போய்ப் போடா விட்டால் பொல்லாப் பழியும் பாவமும் ஆகும்' என்று ஓடினான். அதனைக் கண்ட துறவி தம் மாணவன் எவ்வளவு நல்லவன்; பிறர்பொருளை விரும்பாதவன் என்று வியந்து பூரிப்படைந்தார்.