உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

157

குரு தன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்காக மாணவன் தானே துரும்பை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டதை அறியாமல், குரு நல்லெண்ணம் கொண்டு விட்டார். அதனையறிந்து தனக்குள் எண்ணி மகிழ்ந்தான் மாணவன்.

ஒருநாள் குரு, குளத்தில் குளிக்கச் சென்றார். அதுவரை மாணவனாகிய இளந்துறவியிடம் தம் கைத்தடியை மட்டும் குரு தருவது வழக்கம் இல்லை. கையைவிட்டு அவர் அதை யாரிடமும் தருவதும் இல்லை. “நல்ல மாணவன் இவன்" என்ற நம்பிக்கையால் அடுத்தநாள் தடியை அவனிடம் தந்துவிட்டு, குரு குளத்திற்குள் நீராடச் சென்றார்.

குரு குளத்திற்குள் சென்று நீரில் எப்பொழுது முழகிக் குளிப்பார் என்பதைக் கண்ணிமையாமல் பார்த்துக் கொண்டிருந்த மாணவன், இதுதான் தக்க பொழுதென்று எண்ணி அங்கிருந்து அவருக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தான்.

குருவின் தடி என்ன வெறுந்தடியா? வெறுந்தடியென்றால் அதனைத் தட்டிக் கொண்டு போவதற்காக அவருக்கு மாணவனாக நடிக்க, வந்து சேர்ந்திருப்பானா? அத்தடியை உள்ளே துளையிட்டுப் பொற்காசுகளால் நிரப்பிவைத்திருந்தார் துறவி. நெடுங்காலம் தொகுத்து வைத்த பொருள் முழுவதும் அத்தடி யினுள் இருந்தது. குளத்துள் காணாது தேடினார். நொடிப் பொழுதில் பொன் பறிபோனதை எண்ணிப் புலம்பினார்.

முல்லாவின் காலத்தில் ஊருக்கு ஒரு நீதிபதியை நியமிக்கும் முறை இருந்தது. முல்லாவுக்குத் தாமே தம் ஊரில் நீதிபதியாக வரவேண்டும் என்ற பேராவல் இருந்தது. அவ்வூரில் இவரே நீதிபதியாகத் தக்கவர் என்று ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அரசர் சிலரை அனுப்பினார்.

அரசரால் அனுப்பப்பட்டவர்கள் வரும்போது முல்லா தம் தலையில் ஒரு வலையைப் போட்டுக் கொண்டு தெருவில் நடந்துவந்தார். "முல்லா நீர் வலையோடு திரிகிறீரே ஏன்? என்று அவர்கள் கேட்டனர்.

"நான் ஒரு காலத்தில் மீன்பிடிப்பவனாக இருந்தேன். பின்னர் முல்லாவாகிவிட்டேன். நான் முல்லாவாக ஆனாலும் வேறு எத்தகைய பதவியைப் பெற்றாலும் என் பழைமையை மறந்து விடக்கூடாது என்பதற்காக மீன்வலையைத் தலையில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். பொழுதுக்கு ஒரு முறையாக நடப்பவர் என்ன மனிதர்?" என்றார் முல்லா.