உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

51

கண்ணைப் பொத்தி ஓடிக்

காண நிற்பான் மாடி!

உண்ண அழைக்கும் வேளை,

ஓடி ஒளிவான் மூலை!

வீடு பேறு என்னும்

விருப்ப மிக்க உலகம்

வீடு தானே என்று

விளங்கச் செய்வான் தம்பி.

82. புகழ்கூறு

குட்டிப் பயலைக் குட்டாதே!

கொஞ்சி மகிழ்வாய் கட்டாயம்;

மட்டி மடையன் என்னாதே!

மணியே மதியே என்பாயே!

முட்டாள் முட்டாள் என்பாயேல்,

முட்டாள் எண்ணம் தங்கிவிடும்!

கெட்டி கெட்டி என்பாய

கெட்டி எண்ணம் கிளர்ந்துவிடும்!

குறையைப் போக்க நினைவாயேல்

நிறைவைக் கூறிப் புகழ்வாயே!

நிறைவுப் புகழ்ச்சி, கொண்டுள்ள

குறைவை அகற்றி ஒழித்திடுமே!

புகழை விரும்பார் அருமையரே,

புகழால் திருத்தல் பெருமையதே!

இகழ இகழ மிக இழிவாம்

புகழப் புகழ மிகுபுகழாம்!

புகழைக் கூறி, இகழ்வதனைப்

புகன்று திருத்தல் மேலாகும்!

புகழைக் கூறத் தயங்காதே!

புகழே ஆக்கம் மயங்காதே!