உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

உன் ஐந்து வண்ண வில்லை, நைந்து போன உள்ளம் கண்டாலும் நலங் கொழிக்குமே!

கழுத்து அழகைச் சொல்வேனா?

கழுத்துக்கு என்றே அளவெடுத்துச் செய்து வைத்தாற் போன்ற கழுத்து வரி அழகைச் சொல்வேனா?

வளை வாய் மூக்கினைக் கொண்டு, கிளைவாய் அமர்ந்து குத்தும் அழகைச் சொல்வேனா?

கொஞ்சும் மழலையை நெஞ்சில் பொழியவிடும் எழிலை இயம்புவேனா?

அன்புக் கிளியே, இன்பச் சுரப்பே,

குறுகுறு நடையும் குறுகுறுப் பார்வையும்

கொள்ளையம்மா கொள்ளை!

அழகு செய்யும் அவலமா?

அழகு கைப்பட வேண்டும் என்னும் ஆர்வமா?

பறந்து திரியும் உன்னைப், பார்வைப் பொருளாக்கிக் கூண்டுக்குள் வைக்க எண்ணிய முதற் 'குறுமனம்' இருக்கிறதே, அது 'விடுதலை' அறியாக் 'கெடுதலைக்' குறுமனம்!

கலைமயில்

மயிலே,

உனக்கு எத்தனை அழகு!

இத்தனை அழகையும் கூட்டி உனக்கு மட்டும் ஏனோ வைத்தான் அந்த இயற்கைப் படைப்பாளன்?

மற்றை மற்றைப் பறவைகள் எல்லாம் பொறாமை கொள்ள கண்டவர்கள் எல்லாம் காட்சியழகில் மயக்கம் கொள்ள உன்னை மட்டும் ஒப்பிலா அழகாகப் படைத்த அப்படைப்பாளன் ஓரவஞ்சகன்தானே?

கண்ணே, என உன்னை அன்பால் அழைக்கலாம்! எவ்வளவு பொருள் பொதிந்த பொருத்தமான அழைப்பு. ஆயிரம் ஆயிரம் வண்ணக் கண்கள் - உன் 'தோகைக் கண்கள்' அவை என் ‘ஓகைக் கண்கள்' அல்லவோ?