உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

"நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான் தேரினும் அஃதே துணை”

என்பது திருக்குறள். அதிகாரியை எண்ணி அடங்கி ஒடுங்கிச் சிறப்புச் செய்யக்கூடிய உலகியலில், அவரைப் புறக்கணித்து, ஊதுகொம்புக்காரன்மேல் உயிரிரக்கம் கொண்ட அருமை பிறரிடம் காண்டற்கு அருமையேயாம். அடிகளாரே எண்ணி அருள்பாலித்த செயல்தானே இது! கொம்பூதி, தனக்கு உயிர்போகும் நிலையாயினும் கொம்பூதிக் கொண்டே உயிரை விடுவதுதான் 'தன் விதி' என எண்ணும் அடியன்தானே! சொல்லும் செயலும்

வள்ளலார் வாய்மொழி அனைத்தும் அருண்மொழியே என்பதில் ஐயப்பாடு இல்லை. அருளே ததும்பிய நெஞ்சில் இருந்து வெளிப்படும் சொல்லும் அருளே என்பதில் மாறு எண்ணுவதற்கு இடமேது?

ஊதுகொம்புக்காரனுக்கு 'உரை'யின் இடையே வந்து உருகி நின்று உணவு தந்து உதவிய நிகழ்ச்சியை உரைத்தோம். அத்தகைய நிகழ்ச்சிகள் வள்ளலார் வாழ்வில் பல. இன்னும் ஒன்று:

வள்ளலார் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார். அவ்வழியே, கண் வலியுடைய ஒருவர் போகக் கண்டார்; அவர் முகமெல்லாம் வீக்கமாகி இருந்தது; வள்ளலார் உள்ளம் உருகியது; உரை தடையுற்றது; உரையை நிறுத்தி, நோயரை அழைத்தார். அவரிடம் "கண்ணில் இரசதாளி வாழைப்பழம் வைத்துக் கட்டினால் நோய் ஒழியும்" என்றார். அதனைச் சொல்லியனுப்பிய பின்னரே உரையில் நாட்டம் உண்டாயிற்று வள்ளலார்க்கு.

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்"

என்னும் குறளின் அருமை வள்ளலாரிடம் என்றும் ஒன்றியே இருந்தது. சொல்லிய வண்ணம் செய்தல் பிறர்க்கு அருமையே! அவரோ சொல்லிய வண்ணமன்றிப் பிறவழியில் செல்லுதற்கு இயலாவண்ணம் இயல்பிலேயே ஊறிவிட்டவர். ஆதலால் பிறர்க்கு அருமையாவது அவர்க்கு எளிமையாயிற்றாம்.

என்னென்ன திண்மைகள் உறுதிகள் இருந்தும் ஆவதென்ன? வினையுறுதி இல்லாரை எவர் மதிப்பார்?