உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வள்ளலார் நிறுவனங்களும் திருக்குறளும்

'சன்மார்க்கம்' 'என்மார்க்கம்' எனக் கண்டவர் வள்ளலார்; அது 'நன்மார்க்கம்' என்பதை உறுதிப் படுத்தியவரும் அவரே.

சன்மார்க்கம் என்பது மெய்(யுணர்தல்) வழி. அச்சன் மார்க்கமும் 'சமரச சன்மார்க்கம்' என வழங்கப்படும். அச் சமரசம் என்பது ‘பொதுநிலை' ஆகலின், வடலூரார் வாய்மை யுணர்ந்த மறைமலையடிகளார், சமரச சன்மார்க்க சங்கத்தைத் தனித் தமிழில் 'பொதுநிலைக் கழகம்' என மொழியாக்கம் செய்து கொண்டார்.

மறைமலை அடிகளார் பல்லவபுரத்தில் (பல்லாவரம்) 'சமரச சன்மார்க்க சங்கம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்து நடத்தியவர் என்பதும், பின்னர் அதன் பெயரையே 'பொது நிலைக் கழகம்' என ஆக்கிக் கொண்டவர் என்பதும் கருதத்தக்கன.

வள்ளலார் முதற்கண் (1865) சன்மார்க்க சங்கம் கண்டார். அதன்பின் தருமச்சாலை (1867), சித்தி வளாகம் (1870), ஞானசபை (1871) என்பவற்றைக் கண்டார்.

நல்லினம் சங்கம்

-

ஒருவர் வாழ்வில் 'இனத்திற்கு' மிகுந்த இடமுண்டு. ஒருவரை உயர்த்தவும் தாழ்த்தவும் இனத்தால் கூடும்.

அதனாலேயே பெரியாரைத் துணைக் கோடல் என்பதை முதற்கண் வைத்துச் சிற்றினம் சேராமையை அடுத்தே வைத்தார் வள்ளுவர் (45, 46).

“தக்கார் இனத்தனாய்த்தான் ஒழுகுதல்” (446)

"இனத்தியல்ப தாகும் அறிவு" (452)

'இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல்" (453)

"இனநலம் எல்லாப் புகழும் தரும்" (457)

"இனநலம் ஏமாப் புடைத்து” (458)

“நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை" (460)