உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

115

அது வள்ளலார் பிறந்த இம் மண்ணின் மைந்தர்க்குக் கடப்பாட்டு ஆவணமாக்கப்பட வேண்டும். மண்ணின் மைந்தரை ஆளும் மக்கள் அரசு, உலகப் பேரொளியாம் வள்ளலாரை முதற்கண் நடுவண் அரசு நன்கு அறிந்து கொண்டு, தான் கொண்ட சமயச் சார்பிலா அடிப்படைக் கோட்பாட்டு மூலவராக இருந்தவரும், அவ்வழியே வழியென வையகத்துக்கு வழங்கியவரும் ஆகியவர் வள்ளலாரே என்பதை உணரச் செய்தல் வேண்டும்.

வள்ளலார் தம் சன்மார்க்கக் கொள்கைகள் தனிப் பெருந்திரட்டாக முறைப்படுத்தி வரைந்து மொழியாக்கம் இந்தி, ஆங்கிலம் முதலாம் மொழிகளில் செய்வதைத் தன் செம்மொழிச் செயல் திட்டங்களுள் ஒன்றாகக் கொள்ள வேண்டும். இச்செயல் வள்ளலார் பெருமை பரப்பும் நோக்கினது அன்று! வையகக் காப்பரணமாக அமைவது என்பதை அறவோரும் அறிவரும் அறிவுறச் செய்தல் வேண்டும். ஒரு பெரு வாழ்வின் பெருந்தகை நோக்கம், உலகம் உய்ய வழிகாட்டும் என்பதை மெய்ப்பிக்க வேண்டும். இதனை வடலூர் அமைப்புகள் தலைமேல் தாங்கிச் செயல்படுமா?

வள்ளலார் கொள்கை வழிப்பட்ட தொண்டு நிறுவனங்கள், தனித்தனித் தோன்றல்கள் தங்கள் பங்களிப்பை வழங்குதல் வாய்க்குமா?

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்!

இனி வள்ளலார் தாம் பயின்ற கல்வியும் தமக்குத் தனிப் பெருந்தந்தையாரால் பயிற்றப்பட்டதாம் கல்வியும் ஓதாக்கல்வி என்பதை உறுதிப்பட மொழிகின்றவற்றைத் திரட்டிக் காட்டி அவற்றின் மெய்ப்பொருள் விளக்கமாக அமைந்த வள்ளுவர், திரு.வி.க.வியம், எம் படிப்பறிவு, பட்டறிவு, இயற்கை விளக்கம் என்பவற்றால் விளக்கம் செய்து தெளிவிப்பதாம். வள்ளலார் கூறிய ஓதாக் கல்வி நமக்கும் கைவரப் பெறுவதே என்பதைக் காட்டுவது அது.

சாவாக்கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு நுணுகி நுணுகிக் கண்டு உணரத்தக்கது. தடை விடைகள் மல்கியது நேரில் மெய்ப்பித்துக் காட்ட இயலா நெறியது. ஆனால், மெய்ம்மையில் குன்றாதது. சாகாக் கலையும் சால்புக்குக் கட்டளையாக வாழ்வார் தமக்கெல்லாம் வாய்க்கக் கூடியதே