உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

குடும்ப நலத்திற்கு வாழ்ந்து இயற்கை எய்தியவர் ‘குடும்ப’ விளக்காகி,நாள் வழிபாடு பெற்றனர்.

இளமை நிலையாது, வளமை நிலையாது, உடல் நிலையாது என்பவை நாளும் பொழுதும் நாம் காணும் காட்சிகள்! இவை சமயக் கோட்பாடுகள் ஆகின. "நிலையா உலகில் நிலைபெற வழிகாணுங்கள்” எனத் தூண்டின சமய நூல்களும் நெறி நூல்களும், குருவர் உரையும் அதுவே ஆயின. காஞ்சித் திணை என்னும் தமிழ்நெறிப் புறத்திணையும் அதுவேயாம்.

மனைவியை இழந்தான் கொள்ள வேண்டும் துறவின் பெயர் 'தபுதாரம்.

கணவனை இழந்தாள் கொள்ள வேண்டும் துறவின் பெயர் 'தாபதம்' இவை தொல்காப்பியம்.

ஒரு தாய்

புத்தர் வரலாற்றில் இடம் பெற்றதொரு நிகழ்ச்சி. உண்மையை உறுதியாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொள்ள வாய்த்த அருமையது அது.

தன் ஒரே மகவை இழந்த தாய், புத்தர் பெருமான் முன் தன் இறந்த மகவின் உடலோடு நின்றாள். "பெரும!இம்மகவு இறந்தது; தாங்கள் அருள் புரிந்தால் இம்மகவு எழும்" என்று வேண்டினார்.

அத்தாயின் அவலமுணர்ந்த பெருமான் அவள் வழியாகவே அவள் உணருமாறு, "அம்மா, உன் மகவை எழுப்பித் தருவேன். ஆனால், அதற்கு ஒரு பொருள் வேண்டும். கொஞ்சம் கடுகு வேண்டும். அந்தக் கடுகு இதுவரை எவரும் சாகாத வீட்டில் இருந்து வாங்கியதாக இருக்க வேண்டும்" என்றார்.

உடனே வாங்கி வருவதாகப் புறப்பட்டாள் தாய். அவள் அவலம் அறிந்தோர் கடுகு தந்தனர். அவள், "இவ்வீட்டில் எவரும் இறந்திலரோ" என்று வினாவிய வினாவுக்கு என்ன சொல்வர்? தத்தம் வீட்டு இறப்புகளை உரைத்தனர். "சாவு இல்லா வீடு உலகில் இல்லவே இல்லை" என்பதை அவளே உணர்ந்து கொண்டு மீண்டும் புத்தரை அடுத்தாள்.

"அம்மா! பிறந்தார் அனைவரும் இறந்தே ஆவர். இறவார் இல்லா வாழ்வு இல்லை என்பதை நீ உணருமாறே இது செய்தேன். எதை நீ உணர வேண்டும் என நினைத்தேனோ அதை உணர்ந்தாய்" எனத் தேற்றி அனுப்பினார்.