உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

135

இன்னவாறு கூறுகின்றன. யாக்கை நிலையாமையே இவை குறிப்பனவாயின் அப்பகுதியிலே இடம் பெற்றிருக்கும். ஆதலால், உயிர் நிலைக்கும் எனவும், உயிர் நிலையாமையும் உண்டு எனவும் இரு கொள்கைகள் இருந்தன என எண்ண வேண்டும். இனி உயிர் நிலையாமை என்பதை உயிர் உடலில் நிலையாமை என்று பொருள் கொள்வதும் உண்டு. அவ்வாறாயின் யாக்கை நிலையாமைக்குள்ளேயே அடங்கி விடுமே!

"உயிர் நிலையாது" என்னும் கொள்கைக்கும், 'உயிர் நிலையானது' என்னும் கொள்கைக்கும் உள்ள இடைவெளி எதிரிடைவழி, முரண்வழி, அதனை எண்ணித் தெளிய வேண்டும்.

மரணமிலாப் பெருவாழ்வு, சாகாக் கலை என்பவற்றை விரித்தும் வெளிப்படவும் உரைத்தவர் வள்ளலாரே. எண்ணிலா இடங்களில் மீள மீள உரைத்தவரும் அவரே. அந்நிலைக்குச் சிலபடி நிலைகள் அவர் பாடலாலேயே அறிய வாய்க்கின்றன. மகன்மை :

வள்ளலார் இறைவனைத் தம் தந்தையாகக் காண்கிறார். இறைவன் வள்ளலாரைப் பிள்ளையாகவும் ஏற்றுக் கொள்கிறான். இம் மகன்மை தந்தைமை முறையை எண்ணுவோம்.

அப்பா, அத்தா, தந்தையே என விளிப்பவற்றைக் குறித்து மொழிவதன்று இது.

பிள்ளைச் சிறு விண்ணப்பம், பிள்ளைப் பெரு விண்ணப்பம் என்பவை இறைவனைத் தந்தையாகக் கொண்டு, தாம் மகனாக நின்று வேண்டுவதாகக் கொள்ளல் முறையாம்.

'தடித்தவோர் மகனைத் தந்தைதானடித்தால்' என்பதை உவமைப் பொதுமையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால்,

“நினது செல்வப் பிள்ளை என எனக்குப் பெயரிட்டாய்" (3895) “நீயே என் பிள்ளை" (4043)

“சிற்றம்பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே” (4057)

"சிற்சபை உடையான் செல்வ மெய்ப் பிள்ளை என்றொரு பேர்ப் பட்டமும் தரித்தேன்” (4736)

மகன்மையொடு, உரிமை கொள்ளப்பட்ட படிமான முறைமை யையும் சுட்டுகிறார்.