உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

தெய்வப்பிண்டம் எனக் கொண்டு அவர்பால் அச்சமும் அன்பும் கொண்டு நின்றனர்.

பிறகு அவ்வணிகப் பிரபு சபாபதிப் பிள்ளைக்குப் பதிலாக இனி அவர் தம்பியே பிரசங்கம் செய்தால் போதும் என்று கூறினார் என்கிறார் மணி திருநாவுக்கரசு.

இச்சோமு செட்டியார் இல்லம் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக, மறைமலையடிகள் நூலகம், வள்ளலார் மாளிகை என்பவற்றைக் கொண்டதாய் விளங்குகின்றது. ஆங்கு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த இடம் என்னும் கல்வெட்டு உள்ளது. கையேடு படித்ததும், தம் தமையனாரின் பொழிவினும் மேம்படப் புராணப் பொழிவு செய்ததும் ஆகியவை வள்ளலார் அதற்கு முன்னரே கற்றிருந்த நூற்கல்வியை வெளிப்பட விளக்கும் நிகழ்ச்சிகளாம்.

வள்ளலார் உரைச் சிறப்பை மற்றையோர் கூற, தாம் கேட்கும் அவாவினராய் மறைந்து இருந்து தமையனார், பொழிவு கேட்டதாகிய செய்தியால், படிக்கவில்லை என்று தம் தம்பியைக் கண்டித்தும் தண்டித்தும் வந்த அவர், தம்மினும் மேம்படக் கற்றாராகக் கொள்ளவும் உள்ளுள் வியக்கவும் நேர்ந்ததாம். வள்ளலார் பொழிவு இவ்வாறு அமைய அவர் எழுத்து வழியாக அறியக் கிடக்கும் நூற்கல்வி அளவு தான் எத்தகையது!

கல்விப் பரப்பு :

வள்ளலார் தம் கருத்தாக - தம்முணர்வாகப் பாடிய பாடல்கள் மட்டுமா, அவர் பாடல்களில், உரைநடைகளில், கடிதங்களில் உள? எத்தனை எத்தனை நூல்களை மேற்கோள் காட்டுகிறார்!

தொல்காப்பியம் :

வள்ளலார் காலம், தொல்காப்பியக் கல்வி துலக்கமில்லாத காலம். சென்னையில் ஒருவரும் திருவாரூரில் ஒருவரும் ஆக இருவரே தொல்காப்பியம் வல்லாராக இருந்தார் என்கிறார் பழந்தமிழ்ப் பதிப்பாசிரியர் சி.வை.தாமோதரனார். வள்ளலார் தொண்ட மண்டல சதகப் பதிப்பில் தொல்காப்பிய மேற்கோளைக் காட்டுவதை நோக்குவார், அவர் அதனைக் கல்லாதவர் எனக் கொள்ளக் கூடுமோ? அப்படி அவர் காட்டும் மேற்கோள் நூல்கள் ஒன்றா இரண்டா?