உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

187

நூலறிவு பெறாமலும் நுண்ணறிவுடன் திகழ்வாரும் உண்டு. அறங்கூறுமன்ற ஆய்வினும் மேதக்க ஆய்வு பட்டறிவு வழியே பெற்று ஊர்வழக்குகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வல்லாரும் திகழ்ந்ததுண்டு. நூற்கல்வி கல்லானுக்கும் கழிய நல்ல ஒட்பம் உண்டாதல் உண்டு என்பதை வள்ளுவம் சுட்டுகின்றது.

நூற்கல்வி இல்லாரும் நுண்ணிய நூற்கல்வி வல்லார்க்கும் வழிகாட்டியாகத் திகழ்தல் உண்டு என்பதன் உலகறி சான்று வீரமாகுரவர் விவேகானந்தர் தமக்குக் குருவராக விளங்கிய இராமகிருட்டிணர். ஒரு பொருளையே நூற்கல்வியிலா ஆசிரியரும் நூற்கல்வி மிக்க மாணவரும் பெற்றாலும் அறிவுறுத்தும் வகையால் இருவரும் வேறுபடுவர்.

நூற்கல்வியிலார்

மேற்கோள்களையும்,

நூற்கல்வி

யுடையார் மேற்கோள்களையும் ஒப்பிட்டுக் காணின் உண்மை விளங்கும்.

நூற் கல்வியிலார் மேற்கோள் உவமை கதை விளக்கம் எவையெனினும் நூற்சான்றுடன் அமையா! தம் பட்டறிவு தம் உள்ளறிவு ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இருக்கும்.

'இன்ன நூலில் இவர் இவ்வாறு கூறுகிறார் என்னும் குறிப்பு இராது.

நூற்கல்வி பெற்றார் உரையிலோ பிறர் கூறிய நூற் குறிப்புகள்,தம்பட்டறிவு தம் உள்ளறிவு ஆயவற்றின் சான்றாக முந்து முந்து வந்து நிற்கக் காணலாம். இவ்வேற்றுமை நோக்கத் தக்கதாம்.

தொன்மக் கதைகள் பல நூற்கல்வி கல்லார் உரையிலும் வரல் உண்டே எனின், அக்கதை நாடளாவிய அளவில் கதையாய் நாடகமாய் உரையாடலாய் -பரப்பப்பட்டமை கேட்டுக் கூறப்பட்டவையே ஆகும் என்க.

கல்விப் பரப்பு :

வள்ளலார் தம் உபதேசக் குறிப்புகளுள்,

கலை அறிவும் அருள் அறிவும்

பற்றி உரைக்கிறார் (93).

"பத்து ஆள் சுமை ஒரு வண்டிப் பாரம்;

நானூறு வண்டிச்சுமை ஒரு சூல் வண்டிப் பாரம்;