உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால் “பொய்போ லும்மே பொய்போ லும்மே"

என்றும் மன்னன் அதிவீரராமன் கூறியதை எண்ணினால் தருக்கநெறி வாக்குத்திறவோன் வல்லமை சார்ந்தது என்பது புலப்படும்.

ஒரு பாடல் முற்றிலும் பிழையானது என்றார் எவரோ அவரே அப்பாடல் முற்றிலும் சரியானது என்று நிறுவினார் என்றால், தருக்கப்பாடு இன்னது எனப்புலப்படுத்தவில்லையா? இராமாயண சங்கோத்ரவிக்ருதி என்பது அது.சிவஞான முனிவர் செய்தது. இனி, இன்மைக் கொள்கையாம் நாத்திகம் என்பது என்ன?

உள்ளது என்பதில் ஏறிவிட்ட தன்னலம், அழுக்கு, ஏமாற்று, இழிமை என்பவற்றை ஒழிக்கும் வகையால் தோன்றியதே தமிழகத்து நாத்திகம். தந்தை பெரியாருக்கு முற்பட வாழ்ந்தவர் வள்ளலார்; அதனால் அவர் சுட்டும் நாத்திகம் பெரியாரைக் குறித்தது அன்று என்று உணர்தல் வேண்டும்.

உண்டு என்பது இல்லை என்பதும், இல்லை என்பது உண்டு என்பதும் பண்டு தொட்டுப் பயிலும் நெறியே என்பது, "உலகத்தார் உண்டு என்பது இல்லென்பான்"

என வள்ளுவரால் பேசப்பட்டமையால் உணரலாம். "ஒன்றே என்னில் ஒன்றேயாம்

பலவே என்னில் பலவேயாம்

நன்றே என்னில் நன்றேயாம்

தீதே என்னில் தீதேயாம் அன்றே என்னில் அன்றேயாம்

ஆமே என்னில் ஆமேயாம்”

என்னும் கம்பர் வாக்கால் 'அன்று' 'ஆம்' என்பவை வழங்கப் பட்டமை அறியலாம். 'உலகாதயம்' என்னும் கொள்கை உலகளாவியதாம்! பூதவாத நிலையும், ஐயறிவு நிலைப்பாட்டுக் கொள்கையும் பண்டே உண்டாம்.

இன்மை, வெறுமையாகிப் பல்வேறு தீமைகளையும், செருக்கு, தான்தோன்றித் தனம் என்பவற்றையும் உண்டாக்கி விடும். 'அஞ்சுவதற்கு அஞ்சல்' என்னும் அறம் அற்றுப்போனால் உலகியல் அளப்பரிய கேட்டுக்கு ஆளாகிவிடும். ஆதலால், நாத்திகத்தைக் கடிந்து கூறினார் வள்ளலார்.