உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

11

வற்றினும் மேலானதென்ன? தம் வாழ்வைத் திருக்குறள் வாழ்வாக ஆக்குதல் தானே மேம்பட்டது? அவ்வகையில், வள்ளலார் வாழ்வு திருக்குறளை நடைமுறைப்படுத்திய மேதக்க வாழ்வு என்பதை எண்ணுவார் எவரும் எளிதில் அறியலாம்; வள்ளலார் நூலையும் வாழ்வையும் கற்பார் எவரும் கையிற் கனியென அறியலாம்.

<<

கடனென்ப நல்லவை எல்லாம், கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு"

என்னும் செயன்மைக் குறளுக்கு வள்ளலார் வாழ்வு விளக்க வுரையாகத் திகழ்தலையும் அறியலாம்.

திருக்குறள் வெளியீடு

வள்ளலார் திருப்பிறப்புக்குப் பதினோராண்டுகளின் முன்னரே (1812) திருக்குறள் மூலம் நெல்லை அம்பலவாண கவிராயரால் முதன் முதல் அச்சிடப்பட்டுவிட்டது. அதே ஆண்டிலேயே அறிஞர் எல்லிசு அவர்களால் திருக்குறளில் சில அதிகாரங்கள் பொருள் விளக்கம், ஒப்புமை ஆங்கிலப் பெயர்ப்பு ஆகியவற்றுடன் அச்சிடப்பட்டு விட்டது.

சென்னையில் தோற்றுவிக்கப்பட்ட 'கல்விச் சங்கம்' என்னும் நிறுவனத்தில், திருக்குறள் கற்பிக்கும் வாய்ப்பும் அவ்வாண்டிலேயே (1812) ஏற்பட்டது. 1835 வரை 'அச்சுச் சட்டம்' என ஒரு சட்டம் இருந்தும், அச்சட்டப்படி கிறித்தவப் பரப்பாளர்களையன்றி எவரும் எத்தமிழ் நூலும் வெளியிடக் கூடாது என இருந்தும், கல்விச் சங்கத்தில் அறநெறி கற்பிக்க உதவும் என்பதாலேயே திருக்குறள் அச்சிட அச்சட்டம்

தடைசெய்யவில்லை எனலாம்.

திருக்குறள் வகுப்பு

திருக்குறள், கல்விச் சங்கத்தாரால் கற்பிக்கப்பட்டது எனினும், அதனைப் பொதுமக்கள் பொருளாக முதன் முதல் ஆக்கிவைத்தவர் வள்ளலாரே என்பது சிறப்புக்குரியதாம். அப்பொதுமக்கள் தாமும் எத்தகையர்? இந்நாளில் மழலையர் கல்வி, முதியர்கல்வி என்கிறோமே, அவர்கள் கல்வியை அன்றே தொடங்கி வைக்கிறார் வள்ளலார்.

ஆடுமாடு மேய்க்கும் சிறார் (ஆபாலர்) முதலாக, முதியர் (விருத்தர்) ஈறாக அனைவரும் திருக்குறள் கற்குமாறு வகுப்பு நடத்த வழிசெய்தார் வள்ளலார்.