உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

வள்ளலாரின் முதன்மை மாணவர் தொழுவூர் வேலாயு தனார். அவர் இருமொழி வல்லார் (உபயகலாநிதி).அவரே திருக்குறள் கற்பித்தவர்.

திருக்குறள் வகுப்பு மூன்று திங்களாக நடந்து வந்தது. நடத்த அதிகாரங்கள் எத்தனை? மூன்றே அதிகாரங்கள்! விரிவுரை என்றால் அவ்வளவு விரிவுரை! கேட்பவர் நிலையறிந்து எளிமையாய்ச் சுருக்கமாய் உரை சென்றிலது. பாடம் கேட்டவர் வாங்கிக் கொள்ள முடியாராய்த் தத்தளித்தனர். வள்ளலார், திருக்குறள் வகுப்பு நடைபெறும் தன்மையை அறிந்தார். மாணவர்களிடம், "மூடமுண்ட புலவரை அழையுங்கள்" என்றார்.

'மூடம், முண்டம்' என்னும் சொற்களைக் கேட்ட மாணவர்கள் திகைத்தனர். அறியாமையை உண்ட புலவர்- அறியாமையை இல்லாமல் செய்துவிட்ட அறிஞர் -எனப் பொருள் கூறி, கேட்பவர் இயல்பறிந்து கற்பிக்குமாறு அவர்க்குக் கட்டளையிட்டார் வள்ளலார்.

வள்ளலார்

திருக்குறள் வகுப்பு நடத்திய தொழுவூரார் இராமலிங்கரு க்குச் சூட்டிய பெயர் 'வள்ளலார்' என்பது. இறைவனை இறையடியார்கள் 'வள்ளலார்' என்று வாயார வாழ்த்தியது தமிழுக்குப் புதுமையில்லை. 'வள்ளலார்' எனக் கொடை யாளரைக் குறிப்பதும் தமிழுக்குப் புதுமையில்லை. அவ் வள்ளலார்களும் 'பாரி வள்ளல்' என்றோ, 'வள்ளல்பாரி என்றோ பெயர்ச் சுட்டுடன்தான் அறியப்பெறுவர். ஆனால், இராமலிங்கர் 'வள்ளலார்' என்றாலே -பெயர்ச்சுட்டு இல்லாமலே தமிழுலகில் அறியப்பெறும் தனியுயர் பெருமைக்குரியவர் ஆனார்!

'வள்ளலார்', வளமிக்க செல்வத்தாலோ அச்செல்வத்தை வாரி வாரி வழங்கியமையாலோ அப்பெயர் பெற்றாரா? அல்லது அப்பெயரை அவர்க்குத் தொழுவூரார் சூட்டினாரா? ஒரு குறள்,விளக்கம் தருகிறது நமக்கு! குறளில் தோய்ந்து வகுப்பு நடாத்திய தொழுவூரார்க்கு அன்றே அது விளக்கமாயிருக்க வேண்டும்.

"உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு”