உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

(322) என அருளாளன் வாழ்வியலைக் குறிப்பார். சீவகாருணிய ஒழுக்க முப்பிரிவுகளிலும், சன்மார்க்க விண்ணப்ப நாற்பிரிவு களிலும் தடைவிடை முதலிய விளக்க வகைகளால் இவற்றை நிலைநாட்டுகிறார் வள்ளலார்.

"உயிர்க்குச் செய்யும் அருளாலேயே இறைவன் அருளைப் பெறமுடியும்" என்பது வள்ளலார் கண்டு தேர்ந்த முடிபு. வித்து எதுவோ அதுவே விளைவுமாம் என்பது கண்ணாரக் காணும் உண்மை. ஆதலால் அருளால் அருளைப் பெறலாம் என்பது இயற்கை நியதி. இதனை, வள்ளலாரைப்போல் உணர்ந்து உணர்ந்து உருகி நின்று விளக்கியவர் முன்னும் இலர்: பின்னும் வாய்த்தல் அரியர்.

உயிர்களுக்குப் பசி தாகம் பிணி இச்சை எளிமை பயம் கொலை என்பவற்றால் துயர்கள் வருமென்றும் அவற்றை விலக்குதலே அருளாளர் கடமை என்றும் கூறும் வள்ளலார், இவ்வேழு துயர்களினும் பசியும் கொலையும் விலக்குதலை முதன்மையாக்கி இறுதியில் பசி நீக்குதலே அனைத்துத் துயரும் நீக்குதலாம் என நிறுவுகிறார். 'அற்றார் அழிபசி தீர்த்தல்", "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்பவற்றுக்குத் திருவருளால் வாய்த்த விளக்கமாகவே அது விளங்குகின்றது. அதன் தொகுப்பு வருமாறு:

"பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள், தாகம் நீங்குவதற்குத் தண்ணீர் கொடாமல் இரார்கள். தண்ணீர் கொடுப்பது பிரயாசமும் அல்ல. தண்ணீர் ஏரி குளம் கால்வாய் முதலான இடத்தும் இருக்கின்றது. தாகத்தால் மாற்றிக் கொள்ளத் தக்க ஏகதேச அபாயம் நேரிடுமேயல்லது, அதனால் தேகத்திற்கு ஆனி நேரிடாது. பசியினால், மாற்றிக் கொள்ளக் கூடாத கெடுதி தேகத்திற்கு நேரிடும்."

"பசியினால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்விக்கத்தக்க தயவுடையவருக்குப் பிணியினால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதற்குத் தயவுண்டாகாமல் இராது. பசி மிகுதியினாலேயே பிணிகள் விருத்தியாகின்றன. ஆகாரப் பக்குவங்களாலேயே அப்பிணிகள் நீங்குகின்றன.பிணிகள் தேகத்தை நெடுநாள் வைத்திருக்கக் கூடும். ஒரு நாளாலும் ஆகாரமில்லாமல் தேகத்தை வைத்திருக்கக் கூடாது.

""