உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் 34ஓ

வள்ளுவர் வாழ்ந்த நாளில் இற்றை நாள் போல் சாதிப் பிணக்கு இல்லை. சாதி என்னும் பெயர்தானும் மாந்தர்ப் பிரிவுக்கு இல்லை. விலங்கின் சாதி, பறவைச் சாதி என்பன போன்ற இனப் பகுப்புக்குறியாகவே நின்றது. அந்நாளில் மாந்தர்க்குக் குலம் குடி என்பவை இருந்தன. இனம் என்பதும் சிற்றினம் பேரினம் நல்லினம் அல்லினம் மேலினம் கீழினம் வல்லினம் மெல்லினம் எனத் தொகுதிப் பகுப்புக் குறியாகவே நின்றது. வண்ணம் (வருணம்) என்னும் சொல் நிறத்தையும் சையையும் குறித்ததையன்றிச் சாதிக் குறிப்புடையதாய் இல்லை. சமயச் சால்பு விளங்கியதை அன்றிச் சமயச் சழக்கு நேர்ந்ததில்லை. செல்வம் வறுமை என்பவை இருந்தன எனினும் அவை மக்களுள் உயர்வு தாழ்வுகளை உண்டாக்கிவிடவில்லை.

"செல்வத்துப் பயனே ஈதல்' என்றும், "ஈயாச் செல்வன் இரவலினினும் இழிந்தான்" என்றும், "தக்கோரிடம் இருந்து இரந்து பெறுவது ஈதல் போலும் பெருமையது" என்றும் கருத்துகள் நிலவியிருந்த காலம் அக்காலம். இவற்றை அறியின் இந்நாளைச் சிறுமையும் அந்நாளைப் பெருமையும் எளிதில் புலனாம். புலனாகவே "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் குறள்மணி அந்நாளையினும் இந்நாளையில் எத்தகு பெருமையதாய்த் தலைமேற் கொண்டு போற்றத்தக்கது என்பது விளங்கும்.

சாதிவெறி, சமயவெறி, இனவெறி, மொழிவெறி, பணவெறி, தோல் வண்ணவெறி, தொழில் வண்ணவெறி இப்படி எத்தனை எத்தனை வெறிகள்? இவ்வெல்லாவற்றையும் ஒரு மொத்தமாக விழுங்கவல்ல கட்சிவெறி, கட்சி அரசியல் வெறி, தனிமாந்த வழிபாட்டு வெறி, கொள்கையிலாக் கொள்கை வெறி கூட்டொவ்வாக் கூட்டு வெறி இப்படி எண்ணத் தொலையாப் புதுப்புது வெளிகள்! இவற்றின் விளைவாம் பிரிவுகள் - பிளவுகள்; முட்டல்கள் - மோதல்கள்; அலைகள் - கொலைகள்! இவ்வெறி யுலகில்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்னும் அமுதமொழி கடைப்பிடியாக வந்தாலன்றி உய்வு உண்டா? இதனை வள்ளலார் உணர்ந்தார். வள்ளுவர் உணர்ந்த உணர்வு வள்ளலார் வழியே பெருக்கெடுத்துப் பேராறு என ஓடியது:

"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே