உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வள்ளலார் வாழ்வும் திருக்குறளும்

அன்பை அடைத்து வைக்கும் அடைப்பு ஒன்று இல்லை. அன்புடைமையை அன்புடையார் கண்ணீரே காட்டிவிடும் என்பது திருக்குறள் கருத்து.

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்"

என்பது அது. இக்குறளின் விளக்கம் வள்ளலார்க்குத் தம் ஒன்பதாம் அகவையிலேயே தெளிவாயிற்று.

அன்பால் நிரந்து இனிது சொல்லுதல்

பள்ளிக் கல்வியிலே வள்ளலார்க்கு நாட்டம் உண்டாக வில்லை. அதனால் அண்ணனார் சபாபதியார்க்குத் தம் தம்பியார் மேல் சினம் உண்டாயிற்று. ஒழுங்காகக் கற்றால் அன்றி வீட்டில் உணவு தருதல் ஆகாது எனத் தம் துணைவியார் பாப்பம்மை யார்க்குக் கட்டளையிட்டார். என் செய்வார் அம்மையார்! அன்னை அன்பு ஒருபால்! ஆளன் ஆணை ஒருபால்! அதனால் ஆளன் இல்லாதபோது பின் வாயில் வழியாக வள்ளலாரை வருவித்து உணவு படைக்கும் நெருக்கடி நிலைமை அவருக்கு உண்டாயிற்று.

உரிமைப் பிள்ளைக்கு, ஊர்ப்பிள்ளைகளுக்கு உரிய உரிமை கூட ல்லையே! இவ்வுள நெருக்கடியால் பாப்பம்மையார் பட்டபாட்டுக்கு அளவில்லை. இந்நிலையில், வள்ளலாரின் தந்தையார் நினைவு நாள் வந்தது. அந்நாளில் அயலார் பலர் வந்து பல்வகைச் சுவையுணவு அருந்திச் சென்றனர். வழக்கப்படியே பசித்துக் கிடந்து ஆளிலாப்பொழுது பார்த்துப் புறக்கடை வழியே புகுந்து ஆறி அலர்ந்து போன உணவு உண்ண வள்ளலார்க்கு நேர்ந்தது. அதனைப் படைக்கும் போதே கண் மடை திறந்த நீரென அண்ணியார் கண்ணீர் சொட்டினார். உள் உருக்கம் கண்ணின் வழி பெருகுதல் தானே இயற்கை! அதனைக் கண்டு கலங்கிய இளைய வள்ளலார் என்னெனக் கேட்டார். அன்னையினும் பரிவுடைய அண்ணியார் வடித்த கண்ணீரன்றோ அது?