உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம் -35

தெளிவாக வேறு சான்று கிட்டும்வரை இவ்வூகங்களைத் தீர்த்துக் கொண்டு உறுதி செய்ய வாய்ப்பு இல்லையாம்.

'பெரும் பொருள் விளக்கம்' என எடுத்துக்காட்டும் புறத் திரட்டுப் பாடல்கள் அனைத்தும் 'வெண்பா'வாகவே உள்ளன. புறப்பொருள் வெண்பா மாலை வெண்பாக்களை ஒப்பநடையிட்டும், ஒத்த பாவமைப்புற்றும் திகழ்வதாலேயே அவ்வெண்பாக்களை அடுத்தே இவ்வெண்பாக்களைக் கொண்டு நடையிடத் தொகை யாளர் அமைத்துள்ளார். எந்தவோர் இலக்கண நூலும் இலக்கணம் கூறும் நூற்பாக்களைக் கொள்ளாமல் எடுத்துக் காட்டை மட்டும் காட்டுவதாக அமைவதில்லை. இப்பெரிய பொது நெறிப்படி எண்ணினால் 'பெரும் பொருள்' என்பது இலக்கண நூலாகவும், அந்நூலுக்கு உரையும், காட்டும் அமைந்த நூல் பெரும் பொருள் விளக்கமாகவும் பெயர் பெற்றிருத்தல் இயல்பாகும். கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் புறத்துறைப் பாடல்கள் ஆதலால், பெரும் பொருள் விளக்கம் புறப்பொருள் நூலாதல் வேண்டும் எனப் பேராசிரியர் வையாபுரியார் கருதுகிறார்.

புறத்திரட்டுத் தொகுப்பு, புறப்பொருள் பாடல்களின் தொகுப்பே ஆதலால் அப்பாடல்களைக் கொண்டே அந்நூல் அப்பொருள் பற்றியது என உறுதி செய்துவிட முடியாது. புறத் திரட்டில் காமத்துப்பால் பற்றிய செய்யுள் 'எனக்குக் கிடைத்துள்ள பிரதிகளுள் ஒன்றிலேனும் இல்லை' என்கிறார் வையாபுரியார். புறத்திரட்டுச் சுருக்கம் என்னும் நூலின் படிகளில் ஒன்றொழிய மற்றவற்றில் கைக்கிளைப் பாடல்கள் 65 இருந்தன என்றும் அவை யனைத்தும் முத்தொள்ளாயிரம் சார்ந்தன என்றும் சுட்டுகிறார். இனிப் புறத்திரட்டின் இறுதியான 131ஆம் அதிகாரம் வாழ்த்து என்னும் பெயரோடு முடிவதும் எண்ணத்தக்கது.

'புறத்திரட்டுச் சுருக்கத்தில் உள்ள காமத்துப்பால் பகுதி விரிந்த நூலாகிய புறத்திரட்டின் கண்ணும் உளதாயிருத்தல் வேண்டும். இப்பொழுது காணப்படாத தன் காரணம் ஒருவாற்றானும் புலப் படவில்லை. புறப்பொருட் பகுதி வாழ்த்து என்னும் அதிகாரத்தோடு முடிதல்கண்டு அதனையே நூல் இறுதியென மயங்கிப் பின்னுள்ள பகுதி வேறொரு நூலென எண்ணி நாளடையில் இப்பகுதியை நம் முன்னோர் இழந்து விட்டதாகக் கருதுதலும் கூடும்' என்கிறார் வையாபுரியார்.