உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

97

தமிழ் என்பதே அகப்பொருள் என்பதைக் குறிஞ்சிப் பாட்ட காட்டும். சங்க நூற்பரப்பில் அகப்பாடற் பரப்பே மிக்கது என்பதும் வெளிப்படை. அவ்வாறாகவும் வாழ்த்தின் பின் காமத்துப்பால் என்பதொரு பால் இடம் பெறவும், அதில் ஒரு நூலில் இருந்த கைக்கிளைப் பாடல்களையே இணைத்தனர் என்பதும் பொருந்தாச் செய்தியாம். புறத்திரட்டுச் சுருக்கத்தார் கைக்கிளையைப் பின்னூலாகிய புறப்பொருள் வெண்பா மாலையார் 'அகப்புறம்’ என்றதற்கு ஏற்பப் புறத்திரட்டின் சுருக்க நூலில் இணைத்துக் கொண்டார் என்பது தகும்.

ஒவ்வொரு பகுதி இறுதியிலும் வாழ்த்துப் பாடும் மரபினைத் தொகையாசிரியர் மேற்கொண்டிருந்தார். என்னின் அறத்துப்பால் முடிவிலும் வாழ்த்துக் கூறியிருப்பார். அவர் நோக்கு புறப் பொருள், அகப்பொருள் எனப் பாகுபாடு கொண்டிருப்பின் அவ்விரு பால்களையே பகுப்பாக்கி இருப்பார். பெயர்தானும் புறத்திரட்டு என்று பெயர் சூட்டியிரார். ஆதலால், புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள பெரும் பொருள் விளக்கப்பாடல்களைக் கொண்டு அது புறப்பொருளே கூறும் நூல் என முடிவு செய்ய முடியாது. ஆயினும் நச்சினார்க்கினியர் குறிப்பை நோக்கிய அளவில் பெரும் பொருள் விளக்கம் அகப்பொருளும் உடையதே என்பது வெளிப்படும்.

அது தொல்காப்பியக் களவியல் நூற்பாவாகிய 'பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' என்னும் நூற்பாவுக்கு எடுத்துக் காட்டும் பெரும் பொருளில் உள்ளதாகக் கூறியமையால் அறியவரும். மேலும் புறத்திணையியல் துறைகளுக்குப் பெரும் பொருள் விளக்க வெண்பாக்களைச் சான்றாகக் காட்டுவது போலவே, அகத் திணையியல் துறைகளுக்கும் வெண்பாக்களைச் சான்றாகக் காட்டுகிறார் நச்சினார்க்கினியர். வழக்கம் போலவே, அவை எந்நூலைச் சேர்ந்தவை எனச் சுட்டிச் சென்றார் அல்லர். அவ் வெண்பாக்கள் பெரும்பொருள் விளக்கம் சார்ந்தவையாக இருத்தலும் கூடும். அவ்வாறாயின், பெரும் பொருள் விளக்கம் அகம், புறம் ஆகிய பொருள் இலக்கணம் இரண்ட ரண்டனையும் உடையதாகக் கொள்ள வாய்க்கும்.

புறத்திரட்டு, புறநானூறு,புறப் பொருள் வெண்பா என்பன போன்ற பெயரீடு இன்றியும், அகப்பொருள், களவியல் என்பன