உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

101

உணர்ந்து போற்ற வேண்டியுள்ளது. இல்லையேல், இன்னநூல் என அறிய இயலா மேற்கோளாகவே அவை இருந்திருக்கும். பெரும் பொருள் விளக்கம் என நூற் பெயர் மாத்திரையே அறியப் பெற்று, மறைந்து போன நூல்கள் என்னும் பெயர்ப் பட்டியலுள் ஒடுங்கி யிருக்கும் என்பதுண்மையாம்.

இனிப் புறத்திணை இயலில் பெரும் பொருள் விளக்கம் என அறியப்பட்ட வெண்பாக்களையன்றி, வெண்பா மேற்கோள்கள் மேலும் பல உளவாம். அவை புறத்திரட்டுத் தொகையில் இடம் பெறாத பெரும் பொருள் விளக்க வெண்பாக்களாக இருத்தல் கூடும். புறப்பொருள் வெண்பாமாலை வெண்பா,தகடூர்யாத்திரை வெண்பா, முத்தொள்ளாயிர வெண்பா என வரும் வெண்பாக்களை நீங்கிய வெண்பாக்கள் 82 இடம் பெற்றுள. இவை வேறு எந்நூலைச் சார்ந்தவை என அறியப்படாதவை. பெரும் பொருள் விளக்க வெண்பாக்களை மேற்கோள் காட்டிய நச்சினார்க்கினியராலேயே காட்டப்படுபவை. ஆதலின், அவ்வெண்பாக்களும் பெரும் பொருள் விளக்க வெண்பாக்களாக இருத்தல் கூடும் என எண்ணலாம். பா நடை, பொருள் நிலை, வைப்பு முறை, பிறர் மேற்கோள் காட்டாத் தன்மை என்பவை இம்முடிவுக்கு வரத் தூண்டுவனவாக

உள்ளன.

இனி, அகத்துறை தொடர்பான வெண்பாக்கள் முப்பத்தொன்று நச்சினார்க்கினியர் வழியே கிட்டுகின்றன. அகப்பொருள் சுட்டும் வெண்பாக்களைக் கிளவித் தெளிவு, கிளவி விளக்கம் என்னும் நூல்கள் கொண்டிருப்பினும், அவ் வெண்பாக்கள் களவியல் காரிகை உரையில் இடம் பெற்றிருப்பினும், அவ்வெண்பாக்களாக இவற்றுள் ஒன்று தானும் இடம் பெறாமையால் இவ் வெண்பாக்கள் பெரும் பொருள் விளக்கம் சார்ந்தனவாக இருந்து ஆசிரியர் நச்சினார்க்கினியரால் காட்டப்பெற்றிருக்கக் கூடும் எனக் கருதலாம்.

இவ்வாறு ஓர் உரைகாரர் மட்டுமே எடுத்துக் காட்டும் அளவில் ஒரு நூல் இருத்தல் கூடுமோ என ஐயம் உண்டாக வேண்டுவதில்லை. கிளவித் தெளிவு, கிளவி விளக்கம் என்பவை களவியல் காரிகை உரையால் அன்றி வேறுவகையால் அறியுமாறு இல்லையே! அவர் தாமும் பாடல்களைக் காட்டி அப்பாடல் இடம்பெற்ற நூற்பெயரையும் காட்டிச் செல்லும் மரபினைக் கொண்டமையால் தானே அவற்றை அறிய வாய்த்தது.