உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

103

இவ்வாறு நச்சினார்க்கினியர் புறப்பொருள் பற்றி மிகுதியாகவும் அகப்பொருள் பற்றி மிகக் குறைந்த அளவாகவும் வெண்பாக்களைக் காட்டியுள்ளார். அவற்றுள் புறப்பொருள் வெண்பாக்களையேனும் தொகையாக்கி வைப்பின் முற்றாக வாய்க்கவில்லை எனினும் ஒரு பாதியாம் பொருள்நூலைப் பெறும் பேறு தமிழுலகுக்கு வாய்க்குமே என்று அரும்பிய எண்ணமே இப்பெரும் பொருள் விளக்க நூலாக்கமாம்.

.

இனி, நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டிய அளவடி வெண்பாக்களையே தொகுக்க வேண்டிய தென்னை எனின், பெரும் பொருள் விளக்கமாகப் புறத்திரட்டுக் காட்டியுள்ள பாடல்கள் எல்லாமும் அளவடி வெண்பாக்களேயாகலின், அப்பாடல் வகையே பெரும் பொருள் விளக்கம் மேற்கொண்ட பாடல் வகை என்னும் உறுதிப்பாட்டாலேயே அவை தொகுக்கப்பட்டனவாம். புறப் பொருள் வெண்பா மாலை அதே அளவடி வெண்பாவைத் தானே மேற்கோளாகக் கொண்டது என்பது ஒப்பிடத் தக்கதாம்.

என்றேனும் எங்கேனும் பெரும் பொருள் விளக்கம் முற்றாகக் கிடைக்க வாய்ப்பினும், அதனாலும் இத்தொகை முயற்சி, ஒரு திரட்டாக அமையுமேயன்றி அதற்கு முரணாக அமையாது எனக் கொள்க.

இனிச் சில வெண்பாக்கள் வேறு நூலைச் சேர்ந்தன எனப் பின்னை வாய்ப்பாலும் ஆய்வாலும் அறிய வருமெனினும், அதனாலும் இத்தொகைக்குக் குறைநேர்ந்து விடாது. என்னெனின் மலரை மாலையாக்கி வைத்த கட்டமைதிதானே இது.