உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம் -35 ஓ

தமிழ்ச் சங்க வெளியீடு (1935 -36) போற்றிக் காத்துப் பாட வேறுபாடும், அரிதாக அருங்குறிப்பும் தந்துள்ளது. பெருந்தொகைப் பாடல் பாடங்களை உரைவிளக்கத்தில் காணலாம்.

திட்டவட்டமாக அறியப் பட்ட பெரும் பொருள் விளக்க வெண்பாக்கள் மட்டுமே உரைவிளக்கம் பெற்றுள்ளமையால், அவற்றின் நயம் மட்டுமே இவண் குறிக்கப்படுகின்றதாம். உந்தும் உணர்வு:

உந்தும் உணர்வில் வெளிப்படும் பாடலே உலகோர், உள்ளத்திலும் உரையிலும் உலாக் கொள்ளும் உவப்புடையதாகத் திகழும். ஏனையவை தடம் பதியாமலும் இடம் பதியாமலும் அமைந்துவிடும். பெரும்பொருள் விளக்க வெண்பாக்களின் சீர்மை முன் வகையைச் சார்ந்தனவாம்.

வீறு மிக்கவன் வேந்தன்.

மாறுபடு மறப்போரை மதியாத அறப்போராளி அவன்.

அவனிடம் அமைந்த வீரர்களோ, அவன் இயல்பே இயல்பாகி விட்ட பெருமையர்!

மானம்வரின் மண்ணுலகுமுழுதும் கிடைப்பினும் கொள்ளாராய் மானம் கெடாரின் உயிரையும் மதியாத உரவோராய்த் திகழ்பவர். தம் வீறு தமக்கேயன்றித் தம் வேந்தனுக்கும் நாட்டுக்கும் எள்ளத்தனை அளவும் தாழ்வு தந்து விடா வகையில் பெருமை போற்றிக் காப்பவர்.

அவர் செயல்கண்டு விம்மித முறுபவன் வேந்தன்.

பகைப்படை வெள்ளமெனப் பெருகி வந்தது.

உள்ளஞ் சோரா வீரர்கள் உவகைப் பேறாகித் தாக்கினர்.

உயிரச்சம் ஆட்ட ஆட்ட எதிரிட மாட்டாராய் ஓட்டமெடுத்தனர் பகைவருள் பலர். உரனிழந்து வீழ்ந்தவர் பலர்; உயிர் ஒடுங்கியவர் பலர்.

ஆயினும், ஒரோ ஒரு வீரன் மட்டும் நிலை குலையாது நின்று போரிட்டான்!

அச்சம் அறியானாக அமர்புரிந்தான்!