உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம் 35

வெட்சிப் புறத்துறையில் இப்பாடலை வைக்கிறார் நச்சினார்க்கினியர். ‘நுவலுழித் தோற்றமாவது, பாடி வீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத்ததற்குக் காரணமான நிரை கொண்டோர் வரவும், ஊரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைமீட்டோர் வரவும்' என்று உரை விரித்துப் பின்னுவதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார் இனியர் (3)

பள்ளமே மேடே, ஓடையே உடைப்பே, முள்ளே முடுக்கே என்றுள்ள இடத்திற்குத் தன்னுயிரைப் பெரிதெனக் கருதாமல் சென்றவன்மைந்தன். தப்பிப்போன - தவறிப்போன -ஆன் அன்று அது! பகைவரால் வென்றால் அன்றி, மீட்டதற்கு இயலாது. பகைவரும் எளியர் அல்லர். எளியராயின் ஆன் கவர்ந்து போர்க்கு நாள் செய்திருக்கமாட்டார். அவரை வென்று வந்த மகனைப் 'புண்படாது வந்தாயோ', 'அல்லல் இன்றி வந்தாயோ' என்று ஒரு சொல்தானும் கேளாதவளாய் - அவன் செயற்கருஞ் செயல் செய்த சீர்மையையும் பாராட்டாளாய் ஆவைத் தழுவிக் கொள்கிறாள். கட்டிப் பிடித்து வழிய வழியக் கண்ணீர் சொரிகின்றாள். என்ன துயரெல்லாம் எதிர்ப்பட்டாயோ, இப்படியாயிற்றே' என்று புலம்புகின்றாள். எவள்? தாய்? தான் பெற்ற மகன் மீட்சியைப் பற்றி மகிழாமல், உரையாடாமல் ஆன்மீட்சிக்கே ஆய் இன்பக் கண்ணீர் வடிக்கின்றாள். மறுமொழி சொல்ல அறியா ஆனொடு உரையாடு கின்றாள்! என்ன விந்தை இது!

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் சான்றோன் எனக் கண்ட தாயாக அவள் இருந்தும், அவனைக் கண்டும் காணாதவளாக அணித்தே கன்றீன்ற ஆனின் வரவுக்கே மகிழ்ந்தாளாகிய மையல் என்ன? எனத் தோன்றலாம்!

தாயைப் பிரிந்த கன்றின் தத்தளிப்பை அத்தாயுள்ளம் அறியாதா? கன்றைப்பிரிந்த தாயின் உள்ளத்தின் உருக்கத்தையும் உலைவையும் அத்தாயுள்ளம் அறியாதா?

தன் இனிய மகன்றன் ஆற்றலையும் தன் குடிச்சிறப்பையும் அறியாளா அத்தாய்?

தன் ஆன் மட்டுமோ கவரப்பட்டது. மந்தை மாடுகள் எல்லாமும் அல்லவோ கவர்ந்து கொள்ளப்பட்டன! ஒவ்வொருவர் வீ டும், ஆன்மீட்சி மகிழ்வாகலே தளிர்க்கும் என்பதன் சான்றுதானே இவ்வொருதாயின் உவகைக் கண்ணீர்!