உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

115

தழிஞ்சி இன்னது என்பதை 'அழிபடை தட்டோர் தழிஞ்சி' என்பார் தொல்காப்பியர். வென்றும் தோற்றும் மீண்ட வேந்தர், தம் படையாளர் முன்பு, போர் செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்டழிந்தவர்களைத் தாம் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக்கோடல்' என்று விளக்கி, தழிச்சுதல் தழிஞ்சி யாயிற்று என்று சொல்லமைதியும் காட்டுவார் நச்சினார்க்கினியர்.

தழிஞ்சிக்கு எடுத்துக் காட்டுக் கூறுவார்போல் 'தழிச்சிய வாட்புண்ணோர்' என்றே பாடலைத் தொடங்குதல் நூலியல் இயம்பத்தக்கது. திணைதுறை கூறப்பட்ட இலக்கணமாம் பெரும் பொருளுக்கு விளக்கமாம் வெண்பாக்கூறுவது என்பதை வெளிப் படுப்பது.புறப்பொருள் வெண்பாமாலை வஞ்சித் தழிஞ்சி, காஞ்சித் தழிஞ்சி என இரண்டும் கூறும். தொல்காப்பியமோ வஞ்சித் தழிவஞ்சி கூறிற்று. பாசறைச் செய்தி யுண்மையால் புறத்திரட்டு பாசறை அதிகாரத்தில் (113) வைத்தது.

தழுவுதல் தழிஞ்சியாம். குடிதழீஇ; அடிதழீஇ (544) என்பன குறள். 'சந்தம் கமழும் தோளாய் தழுவிக் கொளவா' என்பது கம்பர்; 'தழூஉப் பிணையூஉ நின்ற' குரவையைக் குறிக்கும் பத்துப்பாட்டு (மதுரைக். 614-5)

புண்ணோன் இல்லம் என்றது பாசறைக் குடிலை. ஒருவர் அல்லராய்ப் புண்ணோர் பலர் ஆகலின் புண்ணோர்தம் இல்லம்' எனப் பன்மையுறப் பகர்ந்தார். பழித்தலுக்கு ஆட்படாமல் பரவுதலுக்குரிய சீர்மை யுடைய மன்னன் ஆகலின், 'பழிச்சிய சீர் வேந்தன்' என்றார்.

வீரர் இளந்தாடியர் ஆகலின் 'புல்லணலார்' எனப்பட்டார். 'புல்'லின் சிற்றளவு, 'புன்கணீர்' ஒப்பதாம். புண் கடுமைமிக்கது என்பாராய் 'வெய்துயிர்க்கும் புண்' என்றார். கனிவினும் கனிவாய் அமைந்த சொல் காவலன் சொல் ஆகலின், 'சொல்லிய சொல்லே மருந்தாய்' என்றார். 'பரிவினும் சிறந்த மருந்து பாரில் இல்லை' என்னும் மனவியல் மாண்புக் குறிப்பு இஃதாம். ஆறியது என்பது வலி தீர்ந்த அளவிலா நிற்கும். தூர்தலோ குழிப்புண்ணாக இருந்தது ஆறி மேடிட்ட நிலையைக் குறிப்பதாம். ஆறிய சிறப்புரைக்கத் தூர்ந்தன என்றார்.