உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பரிபாடல்

பரிபாடல் என்பது சங்கப் புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று. அதன் சிறப்பைப் புலப்படுத்தும் வகையால் ஓங்கு பரிபாடல்' என்று முன்னோர்களால் சொல்லப்பட்டது.

பரிபாடல் என்பது நூற்பெயராக விளங்கினாலும், அந்நூல் 'பரிபாடல்' என்னும் பாவகையால் அமைந்தமையால் அப்பெயர் பெற்றது.

இசைத் தமிழ் நூல்கள் :

முதுற்சங்கப் புலவர்கள் நாளிலேயே அவர்களால் எத் துணையோ பரிபாடல்கள் பாடப்பட்டமையை இறையனார் களவியல் உரை கூறுகின்றது. பேரிசை, சிற்றிசை, வியாழ மாலை, களரியாவிரை, இசைநுணுக்கம் முதலான இசை நூல்களும் அக்காலத்தில் விளங்கியதை அவ்வுரை மேலும் கூறுகின்றது. ஆதலால், இயலிசை நாடகம் எனப்படும் முத்தமிழும் கைகோத்து உலாக் கொண்டகாலம் அஃதெனலாம்.

பரிபாடல், இசைப்பா; அது நாடக வழக்கும் உலகியல் வழக்கும் தழுவி வருவது; இலக்கிய நயம் அமைந்தது. ஆதலால், முத்தமிழுக்கும் இருப்பாகப் பரிபாடல் விளங்கியது என்பது தெளிவான செய்தியே. முன்னைப் பரிபாடல்கள் கால வெள்ளத் தால் கழிந்து போயினும், பின்னை நாளில் கிட்டியுள்ள இப் பரிபாடல்களாலும் இக்கருத்து வலியுறவே செய்கின்றது, இதனை மேலே காணலாம்.

பரிபாடல் :

ஆசிரியர் தொல்காப்பியனார் பரிபாடல் இலக்கணத்தை வேண்டுமளவு தெளிவாகக் கூறுகிறார். அவர் காலத்திற்கு முன்னரே பரிபாடல் பெரிதும் புலவர்கள் வழக்கில் வழங்கியமை யால் அவற்றைக் கொண்டு அதன் இலக்கணத்தை வகுத்தார். "இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்" என்பது நூன்முறை.