உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

5

பரிபாடல், வெண்பா யாப்பில் வரும் என்றும், அது, வெண்பா வகையுள் அடங்காமல் பலவுறுப்புகளைக் கொண்டு பொதுப்பட வருதலும் உண்டு என்றும், கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் உறுப்புகளைக் கொண்டு நடக்கும் என்றும், பரிபாடலின் சிற்றெல்லை இருபத்தைந்தடியாய், பேரெல்லை நானூறடியாய் அமையும் என்றும் தொல்காப்பியர் கூறினார். இவற்றையன்றி அகப்பொருள் பற்றியே பரிபாடல் வரும் என்னும் குறிப்பையும் தந்தார்.

-

நாம் அறியும் பரிபாடல்களில் வெண்டளை, அகவல் தளை, கலித்தளை, வஞ்சித்தளை ஆகியவை வந்துள! வெண்டளையும் அகவல்தளையும் அடிவகையால் பெருகியும் வருகின்றன. கலித்துள்ளலும் வஞ்சித்தூங்கலும் முடுகியலில் பெரிதும் பயன்படுகின்றன. பல்வேறு பாவகை அடிகளும் பாக்களும் பகுத்து எடுக்கும் வண்ணம் நெடும் பாடலாய் பலவுறுப்புகளுக்கு டமாய் உரையாடல் தடைவிடை யுடையதாய் அமைந்துள்ளமை நன்கு அறிய வருகின்றது. ஆதலால், வெண்பா முதலிய பாக்கள் பெருக வழங்கத் தொடங்கு முன்னரே பரிபாடல் அரும்பி வளர்ந்த நிலையில் திகழ்ந்து பல்வேறு பாவகைகளையும் தன்னில் இருந்து பகுத்துக் கொள்ளத் தந்து பின்னைக் காலத்தில் தன்னை ஒடுக்கிக் கொண்ட தாய்ப்பா அஃதென எண்ணத் தோன்றுகிறது.

70 பரிபாடல் என நூல்களால் நாம் அறியப் பெற்றாலும் நூல் வகையால் கிட்டியவை இருபத்திரண்டே. உரைவழியாகக் கிடைத்த பாடல்கள் இரண்டும், உறுப்புகளாக உதிரிநிலையில் கிடைத்தவை ஒன்பதுமேயாம்.

பரிபாடல் பொருள் :

தொல்காப்பியர் கூறியவாறு, அகப்பொருளே பொருளாகப் பரிபாடல் வரும் என்னும் கருத்து, அம்மட்டில் நிற்கவில்லை. கடவுள் வாழ்த்துப் பெற்று வருதலும் பெருக்கமாகக் காணப்படு கின்றது. பிற்கால ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடல்களுக்கு முன்னோடி போல அமைந்து விளங்குகின்றது பரிபாடல் கலித்தொகையில் வரும் காதல் காட்சி உரையாடல் ஆகியவை போலவே, கடவுள் மணம் கமழும் பரிபாடலிலும் அவற்றைக் காண நேர்கின்றது. இவற்றையும் தொல்காப்பியர் கூறும் பரிபாடல் பற்றிய பிற இலக்கணக் குறிகளையும் கொண்டு நோக்க இப்பரிபாடல் தொல்காப்பியர் காலத்திற்கு மிகப் பிற்பட்டதென்றும், பண்டைப் பரிபாடல் நமக்குக் கிட்டாமையால்,