உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. செவ்வேள் பிறப்பு

செவ்வேள் முதல்வன் எனப்படுவான் (8:17) இறைவன் என்றும் இயம்பப்படுவான் (17:49). முதல்வனென்றும், இறைவன் என்றும் சுட்டப் பெறுபவன் தனக்கொரு முதல் இல்லாதவனும் என்றும் இருப்பவனும் ஆவன். ஆதலால், அவன் பிறப்பு இறப்பு இல்லான்; தான் முதலாதல் அன்றித், தனக்கொரு முதல் இல்லான்; அவனுக்குப் பிறப்புப் பேச்சு உண்டோ?" என்னும் ஐயம் எவர்க்கும் எழும் அதற்குரிய மறுமொழி பரிபாடலில் கிட்டுகின்றது.

தொன்மம் (புராணம்)

இறையன்பர்கள், அடியார்கள், இறையடியார் என்பார் சூழலில் பலப்பல தொன்மைகள் பேசப்பட்டு வந்திருக்கின்றன. அவை கதைகதையாகச் சொல்லியும் கேட்டும் வரப் பெற்றிருக் கின்றன. அச்செய்திகள் அந்நாளைப் புலவர்கள் புலமையிலும் முத்திரையிட்டிருக்கின்றன. அக்கால மக்கள், பழக்கவழக்கங்கள் வாழ்வியல் கூறுகள் இன்னவற்றுடன் அவர்கள் கூறிய பழங் கதைகளும் புலவர்களின் படைப்புகளில் இடம்பெற்று வாழ்வு பெற்று வந்துள்ளன என்பதே மறுமொழியாம்.

உலக முழுவதும் வழங்கப்பெறும் தொன்மச் செய்திகளே தொல்பழங்காவியங்களாக உருக் கொண்டிருக்கின்றன என்னும் வரலாற்றையுணர்வார் இதனை உணர்வார்.

முருகன் பிறப்புச் செய்தி :

முருகன் பிறப்புக் கூறும் செய்தி, செவ்வேள் பற்றிய முதற்பாடலிலே - முதற் பகுதியிலேயே (1-15) இடம் பெற்றுள்ளது. பின்னரும் பிறப்புப் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. பலப்பல புலவர்களும் கூறும் இக்குறிப்புகள், அக்காலத்தில் நாடு தழுவிய அளவில் பேசப்பட்ட கருதப்பட்ட செய்திகளை வாங்கி, வடிவு கொடுத்து நிலைப்படுத்திய செயலாகவே அமைகின்றது.