உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. செவ்வேள் மணவாளன்

'குழந்தை வேலன்', 'குமரவேள்' எனப்படும் முருகன் மணவாளனாக விளங்கும் நிலையையும் பரிபாடல் பகர்கின்றது. தேவசேனையை மணந்ததும், வள்ளியை மணந்ததும்; அவர் களுக்குள் ஊடல் உற்றதும், திருமுருகன் அவர்கள் ஊடல் தீர்த்துக் கூடியதுமாகிய செய்திகளும் பரிபாடலால் அறியக் கிடக்கின்றன. பொருளிலக்கணம் :

பொருளிலக்கணம் தமிழுக்குத் தனிப்பெருஞ்சிறப்பான வாழ்வியல் இலக்கணமாகத் திகழ்வதும், பிறமொழிகளுக்கு இல்லாததுமாம் இயல்பினது. ஆதலால், அப்பொருளிலக்கண வளத்தைச் செவ்வேளொடு சேர்த்துப் பார்ப்பதில் பரிபாடற் புலவர்கள் பேரார்வம் காட்டியிருக்கின்றனர். அதற்கு மிக வாய்ப்பாக அமைந்தது, வள்ளியம்மையின் களவுக் காதல் திருமணமாகும்.

இச்செய்தியைக் கூறவரும் குன்றம் பூதனார். "நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின்”

எனக் கூவியழைத்துக் கூறுகிறார். இதனை எண்ணும் போது, "ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய "குறிஞ்சிப் பாட்டு" என்னும் தொடரும், குறிஞ்சிப் பொருளும் நினைவில் முந்துறும்.

நான்கு மறைகளை விரித்துச் சொல்லவல்ல புலமையும் வாய்மொழித் திறமும் அமைந்த புலவர்கள் நீவீர் எனினும் குறையாத தமிழின் பொருளிலக்கணத்தை அறியீர்; நீவிர் அறிதல் வேண்டும்; ஆகலின் கேட்க" என்று தமிழ்ப் பொருளிலக்கணச் சிறப்பை வெளிப் படுத்துகின்றார் அவர்.

"காமத்திலே சிறந்தது காதலையுடைய காமமேயாகும். ஏனெனில், முன்பு தொடர்பு அறியா இருவர் தம்முள் ஒத்த அன்பினராய்த் தம்முள் ஒன்றுபட்டுக் கூடிப்புணரும் புணர்ச்சி அஃது.