உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

25

"மலர்போலும் கண்ணையுடையாய், இனிய மணற் பரப்பமைந்த வையைக்கண் உள்ள பொழிலின் மேல் ஆணை; திருப்பரங்குன்றத்துச் சாரலின்மேல் ஆணை; பார்ப்பார் மேல் ஆணை; நீ சொல்லியசொல் என்னொடு பொருந்தியது அன்று; வ்வாறு கூறி வருத்தாதே; என்மேல் உண்டாகிய மணம் கனிகளிலும் மலர்களிலும் பட்டுவந்த காற்று என் மேல் பட்டமையால் ஆயது. ஆதலால் வருந்தாதே" என்றான் தலைவன். அத்தலைவனை நோக்கிய தலைவி, "இவ்வாறு பொய் கூறுதலை நிறுத்து" என்றாள்.

இவ்வாறு தலைவன் தலைவியர் உரையாடுதலைக் கேட்ட தோழி தலைவனை நோக்கித், “தக்கோர் பெற்ற தகவிலா மகனே! யான் கூறுவதைக் கேட்குமளவும் நில்; இவள், இவளைப் பெற்றவளுக்கு ஒரே மகள்; இதனை அறிந்துகொள்" என்றாள். இவள் இவளைப் பெற்றவளுக்கு ஒரு மகள் என்பதையும், இவள் எத்தகு அருமையள் என்பதையும் இதுவரை அறிந்திலேன்; இதோ வையையின் மணலைத் தொட்டுச் சொல்கிறேன்; களவின்பம் கற்பின்பம் ஆகிய இரண்டையும் தரும் செவ்வேளின் குன்றத்தைத் தொட்டுச் சொல்கிறேன்" என்றான். அதனைக் கேட்ட அவள், "இனிய நம் உறவாக விளங்கும் வையை மணல்மேல் நீ கொண்ட அன்பும் இத்தகைய பொய்ம்மை யுடையது தானோ? செவ்வேள் பெருமானின் குன்றத்தின்மேல் நீ கொண்ட அன்பும் இத்தகைய பொய்ம்மையுடையது தானோ? இரங்கத்தக்கது இது!

"நீ இவ்வாறு மேலும் மேலும் பொய்ச் சூள் சொல்வை யாயின் உன்னை, மெய்யில்லானை வருத்தும் தெய்வங்களுடன், செவ்வேளின் வேற்படையும் சேர்ந்து வருத்தும் அறத்தவர் மேல் சூள் கூறினும் கூறுக; செவ்வேளின் மயிலையும் வேலையும் சூள் கூறாதே; வள்ளியின் மேலும் சூள் கூறுகின்றனை; அதனையும் கூறாதே; அவ்வாறே குன்றத்தின் மேலும் வையை மணல் மேலும் சூள் கூறாதே" என்றாள்.

அதனைக் கேட்ட தலைவன், "எங்களுள் யார் பிரிவது? யார் வருவது? யார் வினாவுவது? யார் விடை சொல்வது? நாங்கள் இருதலையுடைய பறவையின் ஓருயிர் போன்றவர்; ஆதலால் எங்களுள் இவை எவ்வாறு நிகழும்? நீ அதனை எண்ணாமல் நான் கூறுவதைப் பொய்ச்சூள் என்றாய், தலைவி என்மேல் ஏற்றிக் கூறிய குறை மெய்யாக நிகழ்ந்த நிகழ்ச்சியும் அன்று ; நகைப்புக்கு இடமான கனவு நிகழ்ச்சியும் அன்று;