உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

பொய்யேயாம்; யான் குற்றமில்லாதவனாகவும் என்மேல் கூறிய பொய்க்காரணத்தை என் ஒழுக்கமாகக் கருதிப் பொய்ச்சூள் சொன்னதாக இறைவன் தண்டிப்பினும் தண்டிக்கும். அவ்வாறு தண்டிக்கு முன்னரே நீ அவ்விறைவன் திருமுன்பை யடைந்து அடிபணிந்து அவன் சினத்தை ஆற்றுவிப்பாயாக" என்றான்.

தலைவன் இளையர்க்கு இவ்வாறு கட்டளையிடுங்கால் அதனைக் கேட்டு நின்ற தோழி. "எல்லா (ஏலா, ஏடா) நீ என்னை நோக்கிச் செவ்வேளை ஆற்றுவிக்க நீயே செல் என்று கூறுகின்றாய்; அவ்வாறு கூறியதனாலேயே நின் பொய்ச் சூள் உண்மை அறிந்து உன்னை வருத்தும் என்பதை அறிந்து கொண்டோம். செவ்வேள் நின்னை வருத்துவதற்கு முன்னரே, தலைவியே ஆங்குச் சென்று தன்கையால் திருக்கோயில் மணியை அடித்துத் தன் தலையாலே திருவடிகளை வணங்கி நின் பொய்ச்சூளால் உனக்குத் துன்பம் நேராவாறு செவ்வேள் சினத்தை ஆற்றும் காட்சியை, வழக்கமாகப் பன்முறையும் பரங்குன்று செல்லும் நீ காண்பாய் என்றாள்.

வ்வாறு தலைவன் தலைவி தோழி ஆகிய மூவர் உரையாடலாகிய ஊடல் நாடகத்தைப் புனைந்து பொருளிலக் கணக் கூறுகளை விளக்குகிறார் பரிபாடல் ஆசிரியர் நல்லந்து வனார். தலைவன் பரத்தமை, தலைவி அருமை, காதல்திறம், சூள்கூறல், சூளால் நேரும் துயர், இறைவழிபாடு, தலைவனுக்காகத் தலைவி வாழும் வாழ்வு, தலைவியைத் தோழி தன் உயிராகக் கொண்டிருக்கும் உழுவலன்பு, ஊடல், கூடல் என்பன வெல்லாம் உரையாடும் பொருளால் ஆசிரியர் உணரச் செய்தல் தனிப் பெரும் உத்தியாகும். இச்செய்தி எட்டாம் பரிபாடலில் அமைந்தது (36-89).

ஊடற் காட்சி :

மற்றுமோர் ஊடற் காட்சியைக் குன்றம் பூதனார் பாடுகின்றார். இக்குன்றம் பூதனார் திருப்பரங்குன்றத்தவராகவே இருத்தல் கூடும். பெயரமைதி அதனைக் காட்டுகின்றது; குன்றத்தைப்பாடும் அவர்பாட்டும் அதனைக் காட்டுகின்றது. ஆசிரியர் நல்லந்துவனார் மதுரையார் என்பதும் எண்ணத் தக்கது.

ஒரு தலைவன் ஒரு மயில் ஆடுவதைக் கண்டான்; அதன் புள்ளித் தோகையும் அதன் வனப்பும் அதன் அழகார்ந்த ஆட்டமும் அவனைக் கவர மிகக் களிப்புற்றுத் தன்னை மறந்து காட்சியில் தோய்ந்து நின்றான். அவன் நிலை "கண்ட தலைவி”