உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம்

வள்ளி தேவயானை ஊடல் :

-

35ஓ

"கார்த்திகை மகளிர் பெற்றபெருமானே, நீ மையுண்ட கண்ணையுடைய மான் மறியாம் வள்ளியை மணங்கொண்ட போது, ஆயிரங்கண்ணனாம் இந்திரன் மகளாம் தேவசேனையின் மலரன்ன கண், முதுவேனிற் காலம் கார்காலத் தன்மை பெறும்படி கருமுகில்கள் கூடிப் பரங்குன்றில் பொழிந்தாற் போல் கண்ணீர் மழை பொழிந்தது" என்று ஊடலியலை உரைக்கத் தொடங்கினார்

(9:7-11).

"கரைமேல் நின்ற சந்தன மரத்தை முரித்து வையைநீர் கொண்டுவந்த சந்தனக் கட்டையில் புகைசூழ்ந்ததும் மாலை யணிந்ததுமாகிய மார்பில், முத்துமாலை அழகு செய்யவள்ளி யினிடமிருந்து தன்னிடத்து வருகின்ற செவ்வேளைத் தேவசேனை வணங்கி,எம்போலும் பொலிவற்றவரும் நின்மயலிலே அகப்பட்ட வருமாகிய மகளிர் தன்மை, இனி எப்பொழுது மழை பெய்யுமென ஏங்கிநிற்கும் சோலை போல்வதாம். விரும்பியவர்க்கு இன்பந்தராத மாயத்தையுடையவனே நீ வாழ்க! நீ செய்யும் இச்செயல் நின் தவறிலை; நின்னியல்பு அறியாமல் நின் மயலில் பட்டவர் தவறேயாம். ஆதலால் நின்நலத்தைத் துய்க்கப்பேறுபெற்றவர் அல்லேம்' என்று வெதும்பிய பார்வையால் தன்னைக் குறித்துச் சொல்லி வள்ளி காரணமாக ஊடி நின்றாள் தேவசேனை".

அதுகண்ட செவ்வேள், அவ்வாறு ஊடும் தேவசேனையைத் தொடுத்துச் சென்று, அவளடியின்மேல் தலை மாலைபடும்படி வணங்கிக் கப்பம் செலுத்துவான்போல் பணிந்தான். அச்செவ் வேளை 'வருந்தாதே பெறுக' என்று கூறி ஊடல் தீர்த்துத் தன்னைத் தந்தாள் தேவசேனை. அதனைக் கண்ட வள்ளி இறுக்கமாகக் கட்டிய மாலையாலே செவ்வேள் கைகளைக் கட்டி, மாலையையே கோலாகக் கொண்டு. நீ அவளிடத்துச் செல்லாதே செல்லாதே என அடித்தாள். அப்பொழுது வள்ளி தேவசேனை ஆகியவர்களின் மயில்கள் ஒன்றை ஒன்று மோதின; கிளிகள் தம் மழலைச் சொற்களால் ஒன்றை ஒன்று வைதன; வள்ளியின் குன்றத்து வண்டு தேவசேனையின் கூந்தல் வண்டின் மேற்சென்று தாக்கியது. தேவசேனையின் தோழியர் ஊது காற்றும் தாங்காது வளையும் மெல்லிடையராயிருந்தும் சினந்து மாறுபட்டு வள்ளியின் தோழியர் மலைகளொடு எதிரிட்டுத் தம் மாலைகளை வீசினர்; பூப்பந்துகளை எடுத்துப் படைக்கருவியென எறிந்தனர்; தம் மார்பில் கட்டிய கச்சுகளையே சம்மட்டியாகக் கொண்டு அடித்தனர்; இவ்வாறு ஊடல் போர் புரிந்தனர்.